மாற்றத்துக்கு காத்திருக்கும் ஊராட்சிகளின் காசோலை அதிகாரம்

கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட நிதி அதிகாரம் ஊழலுக்கு உதவியாக மாறியிருப்பதால், வருங்காலங்களில் காசோலை அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும், ஊராட்சித்
மாற்றத்துக்கு காத்திருக்கும் ஊராட்சிகளின் காசோலை அதிகாரம்

கோவை : கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட நிதி அதிகாரம் ஊழலுக்கு உதவியாக மாறியிருப்பதால், வருங்காலங்களில் காசோலை அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும், ஊராட்சித் தலைவர்களுக்கும் பகிர்ந்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
"இந்தியா கிராமங்களில் வாழ்கிறது' என்றார் மகாத்மா காந்தி. கிராமங்களின் முன்னேற்றமே நாட்டின் உண்மையான பொருளாதார முன்னேற்றம். இந்தியாவில் ஒவ்வொரு கிராமமும் ஒரு குடியரசாக இயங்க வேண்டும். கிராம சுயராஜ்யமே நாட்டின் அடிப்படை நிர்வாக அமைப்பாக இருக்க வேண்டும் என்று அவர் கனவு கண்டார். ஆனால் ஊராட்சிகளில் நடைபெறும் ஊழல்கள்தான், பிற உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் ஊழலுக்கு ஊற்றுக் கண்களாக இருக்கின்றன.

தமிழகத்தில் உள்ள சுமார் 12,600 கிராம ஊராட்சிகளில், 700-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், வடிகால் வசதி, தார் சாலை, தெரு விளக்கு, ஆழ்துளைக் கிணறு, சுகாதாரம் போன்றவற்றுக்கு நிதியை செலவிடுவதிலும், கட்டட அனுமதி வழங்குவது, வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவிடுவது, இன்னும் பிற செலவினங்களை மேற்கொள்ளுவது போன்றவற்றிலும் கடந்த காலங்களில் ஊழல்கள் நடைபெற்றுள்ளன. இதற்கு ஊராட்சி தணிக்கைத் துறையின் அறிக்கையே சாட்சியாக உள்ளது.

ஊராட்சிகளில் செலவினங்களை மேற்கொள்வதற்காக அந்தந்தப் பகுதிகளில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் நிதிக் கணக்கு, திட்டங்கள் கணக்கு, மானியக் கணக்கு என மூன்று வகையான கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் இந்த செலவினங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. 

ஆனால், நிதி அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலர்களின் கைகளில் இருப்பதால் ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய அவசரகால பணிகள் தடைபடுவதாகவும், நிதி அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் ஊராட்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் ஊராட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இதையடுத்து ஊராட்சி வங்கிக் கணக்கில் காசோலை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளுக்கான செலவுத் தொகையை வழங்கும் அதிகாரத்தை தலைவர், துணைத் தலைவர் ஆகியோருக்கு வழங்கி தமிழக அரசு கடந்த 17.8.2007 அன்று அரசாணை எண் 146 மூலம் உத்தரவிட்டது. காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பிறகு பல ஊராட்சிகளில் இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டனர்.

ஊராட்சிகளில் எவ்வாறு முறைகேடுகள் நடைபெறுகின்றன என்பது குறித்து தகவலறியும் உரிமைச் சட்ட ஆர்வலரும், கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலருமான என்.லோகு கூறியதாவது:  பல ஊராட்சிகளில் சாலைப் பணிகளே மேற்கொள்ளாமல் தார் சாலை அமைத்ததாக பதிவேடு மட்டுமே தயாரித்து நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல தெரு விளக்கு, உபகரணங்கள் வாங்கியதாக போலி பில்கள் தயாரிக்கப்பட்டும், குறைந்த ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறுகளை அமைத்துவிட்டு அதிக ஆழத்துக்கு அமைத்ததாக கணக்கு எழுதியும் ஊராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் கோடிக்கணக்கில் முறைகேடுகளை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும் எந்த ஒப்பந்தப்புள்ளிகளும் கோராமல் தனக்கு வேண்டியவர்கள் மூலம் பல்வேறு பெயர்களில் ஒப்பந்தப்புள்ளி கோரியதாகப் பதிவு செய்து, ஒரே நபருக்கு மட்டும் பணி ஒப்படைக்கப்படுகிறது. ஊராட்சி மன்றக் கூட்டத்தை முறையாக நடத்தாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக வார்டு உறுப்பினர்களிடம் கையெழுத்து மட்டும் பெறப்படுகிறது. ஆனால், கூட்டம் நடத்தியதற்கான புகைப்பட ஆவணம் எதுவும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை.

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கோவை மாவட்டத்தில் பல ஊராட்சித் தலைவர்கள் மீது எழுந்த நிலையில், அது தொடர்பாக ஊராட்சி தணிக்கைப் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வில் 10-க்கும் மேற்பட்ட ஊராட்சித் தலைவர்கள் மீதான புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 

தமிழ்நாடு முழுவதிலும் 743 ஊராட்சிகளில் முறைகேடு புகார்கள் எழுந்துள்ளன. அதில் 618 ஊராட்சிகளின் காசோலை அதிகாரங்கள் ரத்து செய்யப்பட்டன. 28 ஊராட்சித் தலைவர்கள் மீது ஊழல் தடுப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 43 ஊராட்சித் தலைவர்கள் மீதான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இவர்கள் மூலம் சுமார் ரூ.150 கோடிக்கும் அதிகமாக அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்களின் பதவிக் காலம் 2016 அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டதால் நடவடிக்கையும் நிலுவையிலேயே உள்ளது.

எனவேதான் 2007-ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து, காசோலை அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும், ஊராட்சித் தலைவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

ஊராட்சித் தலைவர்கள் தாம் செய்த குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொண்டாலும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துறை ரீதியான விசாரணையை எதிர்கொண்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் பணியிடை நீக்கம், பணப் பலன்கள் பெறுவதில் சிக்கல்களை அனுபவிக்க வேண்டும் என்பதால் தவறு செய்ய ஓரளவு பயப்படுவார்கள் என்றார். அதேநேரம், கடந்த முறை ஊராட்சித் தலைவர்களாகப் பொறுப்பு வகித்தவர்கள் தங்களது பதவியை இழந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆன நிலையிலும், அவர்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதும், அடுத்து வரக் கூடியவர்களுக்கு இதேபோல முறைகேடு செய்ய துணிவை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது. சில ஊராட்சிகளில் முறைகேடுகளில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவர்களின் காசோலை அதிகாரத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை சில மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இருப்பினும் அந்த நடவடிக்கைகளை எதிர்த்து ஊராட்சித் தலைவர்கள் நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்துள்ளனர். அதேநேரம், தணிக்கைத் துறை அறிக்கையை வைத்து அவர்களிடம் இழப்பீட்டைத் திருப்பி வசூலிப்பதற்குத் தேவையான சட்டங்கள் இருந்தாலும் அதற்கான நடவடிக்கைகளில் அரசு சுணக்கம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறலாம் என்ற நிலையில், தவறு செய்த ஊராட்சித் தலைவர்கள் மீண்டும் போட்டியிட முடியாதபடி செய்ய முடியும் என்றாலும், முறைகேடு செய்யப்பட்ட நிதியை வசூலிப்பதற்காக அவர்களுக்கு ஊராட்சிகள் உதவி இயக்குநர்கள் தரப்பில் இருந்து நோட்டீஸ் கூட அனுப்பவில்லை.  இது குறித்து கோவை ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வீ.பத்மாவதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் கேட்டிருந்தோம். ஆனால் தேர்தலுக்குப் பிறகு நோட்டீஸ் அனுப்பலாம் என தெரிவித்துவிட்டதாகக் கூறினார்.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கூறியதாவது: முறைகேடு செய்த ஊராட்சித் தலைவர்கள் தப்பிக்க முடியாது. யார் மீதெல்லாம் நிதி முறைகேடு புகார்கள் உள்ளனவோ அவர்கள் தொடர்பான பொது அறிவிப்பு, உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக வெளியிடப்படும். முறைகேடு செய்தவர்கள் அந்தப் பணத்தை திருப்பிச் செலுத்தினால் மட்டுமே மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியும் என்றார்.

முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு பதிலாக அவர்களின் குடும்பத்தினரோ, உறவினர்களோ கூட வரும் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலையில், காசோலை அதிகாரத்தை அரசு அதிகாரி, மக்கள் பிரதிநிதி என இருவரிடமும் பகிர்ந்து வழங்குவதும், நேர்மையான தணிக்கை நடத்தப்படுவதுமே இனி வருங்காலங்களில் நிதி முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படுவதற்கு வழிகோலும் எனலாம்.

ஊழலில் சிக்கிய  பெண் ஊராட்சித்தலைவர்கள்

தமிழகத்தில் நிதி முறைகேடு நடைபெற்றதாக நடவடிக்கை எடுக்கப்பட்ட 618 ஊராட்சிகளில் பெண் தலைவர்கள் இருந்த 272 ஊராட்சிகளும் அடங்கும். அந்த வகையில் அதிக எண்ணிக்கையில் நடவடிக்கைக்கு ஆளான மாவட்டங்கள்:

திருவாரூர் - 50, ராமநாதபுரம் - 44, திருவண்ணாமலை - 20, ஈரோடு - 19, வேலூர், நெல்லை - 18, திருப்பூர் - 14, மதுரை - 13, கோவை, திருவள்ளூர், விழுப்புரம்- 10. அதேபோல 2011 முதல் 2016 வரை ஊராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதாக மொத்தம் 145 ஊராட்சிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மீது காசோலை அதிகாரம் பிரிவு 203-இன் கீழ் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளனர். மாவட்டம் வாரியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட ஊராட்சிகளின் விவரம்: கோவை - 4, திருச்சி - 10, தேனி - 15, திருவண்ணாமலை - 39, ஈரோடு - 1, பெரம்பலூர் - 22, கரூர் - 4, நாமக்கல் - 5, கிருஷ்ணகிரி - 7, காஞ்சிபுரம் - 3, தூத்துக்குடி - 2, திருவள்ளூர் - 21, வேலூர் - 12.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com