ஏலகிரி மலையில் சோழர் காலத்து கல்வெட்டு, நடுகல் கண்டெடுப்பு

ஏலகிரி மலையில் சோழர் காலத்துக் கல்வெட்டு, நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஏலகிரி மலையில் சோழர் காலத்து கல்வெட்டு, நடுகல் கண்டெடுப்பு


ஏலகிரி மலையில் சோழர் காலத்துக் கல்வெட்டு, நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் க.மோகன் காந்தி, பி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட ஆய்வுக் குழுவினர் ஏலகிரிமலையில் மேற்கொண்ட கள ஆய்வில் பழைமையான கல்வெட்டு மற்றும் நடுகல் ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து க.மோகன் காந்தி கூறியது: 
ஏலகிரி மலையில் உள்ள நிலாவூரில் வயல் வெளியில் அண்மையில் மேற்கொண்ட கள ஆய்வில் கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலச் சோழர்களின் கல்வெட்டு, நடுகல் ஆகியவை ஒரே இடத்தில் இருப்பது தெரியவந்தது.
கல்வெட்டானது படுத்த நிலையில் உள்ளது. இது 5 அடி நீளமும், 3.5 அடி அகலமும் உள்ளது. பெரிய பலகைக் கல்லில் எழுதப்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் எயில் நாடு இருந்ததையும், அப்போது ஏற்பட்டப் போரில் ஊர் அழிந்தபோது இவ்வீரனும் இறந்தான் என்பதை இக்கல்வெட்டு எடுத்துரைக்கிறது.
இதில் உள்ள ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்பது பல்லவர் காலத்தில் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்ட பகுதி. பிற்கால சோழர்களின் ஆளுகையின் கீழ் இப்பகுதி வந்த பிறகு ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்று பெயர் மாற்றம் பெற்றதை அறிய முடிகிறது. இக்கல்வெட்டில் இடம் பெறும் எயில் நாடு என்பது திருப்பத்தூர், ஏலகிரி மலை ஆகிய ஊர்களை உள்ளடக்கிய பகுதி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சோழர்களின் நாட்டுப் பிரிப்பு முறையை இக்கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது.
இக்கல்வெட்டின் அருகில் நடுகல் உள்ளது. அந்த நடுகல்லில் உள்ள வீரன், கல்வெட்டுக் குறிப்பிடும் வீரனாக இருக்கலாம். 5 அடி உயரமும், 3.5 அடி அகலமும் கொண்ட பெரிய பலகைக் கல்லில் வீரனின் தோற்றம் பிரமாண்டமாகச் செதுக்கப்பட்டுள்ளது. வலது கையில் நீண்ட வாளும், இடையில் கச்சுடன் கூடிய குறுவாளும் உள்ளன. வலதுபக்கம் கொண்டையும், காதுகளில் உள்ள காதணிகளும் நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
வீரனின் கழுத்தில் ஆபரணங்கள், கைகளில் கடகங்கள், கால்களில் வீரக்கழல்கள் உள்ளன. வலதுபக்க மேல் மூலையில் இரு தேவர்கள் இவ்வீரனை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.
இவ்வூர் மக்கள் பொங்கல் தினத்தில் இந்த நடுகல்லுக்குப் படையலிட்டு வழிபட்டு வருகின்றனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com