திருவாரூர்-காரைக்குடி ரயில் சேவை: 3 பெட்டிகளுடன் இயக்கம்

திருவாரூரிலிருந்து காரைக்குடிக்கு 3 பெட்டிகளுடன் பயணிகள் ரயில் புதன்கிழமை புறப்பட்டுச் சென்றது.
திருவாரூரிலிருந்து 3 பெட்டிகளுடன் காரைக்குடிக்குப் புறப்பட்ட ரயில்.
திருவாரூரிலிருந்து 3 பெட்டிகளுடன் காரைக்குடிக்குப் புறப்பட்ட ரயில்.


திருவாரூரிலிருந்து காரைக்குடிக்கு 3 பெட்டிகளுடன் பயணிகள் ரயில் புதன்கிழமை புறப்பட்டுச் சென்றது.
திருவாரூர்- காரைக்குடி மார்க்கத்தில் ஜூன் 1 முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. இந்த மார்க்கத்தில் உள்ள ரயில்வே கேட்களுக்கு போதுமான கேட் கீப்பர்கள் இல்லாததால், மொபைல் கேட் கீப்பர்களை பயன்படுத்தி, ரயில் இயங்கி வருகிறது. இதனால் பயண நேரம் 7 மணிக்கும் அதிகமாக உள்ளது. எனவே, இரு மார்க்கத்திலும் தினசரி ரயில் சேவை என்பதில் மாற்றம் செய்யப்பட்டு, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் திருவாரூரிலிருந்தும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் காரைக்குடியில் இருந்தும் ரயில் சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதன்படி நடைபெற்று வருகிறது. 
எனினும் இரு மார்க்கத்திலிருந்து தினசரி ரயில் சேவையை செயல்படுத்த வேண்டும் எனவும், பயண நேரத்தைக் குறைக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, டெமு ரயிலை 3 பெட்டிகளுடன் இருமார்க்கத்திலும் செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், புதன்கிழமை திருவாரூரிலிருந்து 3 பெட்டிகளுடன் காரைக்குடிக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது. எனவே, இருமார்க்கத்திலிருந்து ரயில் சேவை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இதுகுறித்து ரயில் உபயோகிப்போர் சங்கப் பொதுச் செயலர் ப. பாஸ்கரன் தெரிவித்தது:
திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் தென்னக ரயில்வே சேவையைத் தொடங்கியது மகிழ்ச்சி என்றாலும், பயணிகளின் நலன்கள் எந்த விதத்திலும் கருத்தில் கொள்ளப்படாததால், முழுமையான சேவையைப் பெற முடியவில்லை. டெமு ரயில்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு 3 பெட்டிகளுடன்  இயங்கினால் அதிக சுமை இல்லாததால், வேகம் சற்று அதிகரிக்கலாம். தவிர இது போன்ற ரயில்களில் பழுது ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய இயலுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. 
 எனவே இந்த மார்க்கத்தில் உள்ள அனைத்து ரயில் கேட்களுக்கும் நிரந்தர கேட் கீப்பர்களை நியமிக்க வேண்டும். இதன்மூலம் பயண நேரம் வெகுவாக குறைவதுடன், கூடுதல் சேவையும் கொண்டுவர இயலும். மேலும், கழிவறை வசதி உள்ள சாதாரண ரயில் பெட்டிகள் கொண்டு இயக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், பட்டுக்கோட்டையில் ஐந்து நிமிட நேரம் பயணிகள் நலன் கருதி, கூடுதலாக நிறுத்த வேண்டும் என்றார்.
அலைக்கழிக்கப்படும் மொபைல் கேட் கீப்பர்கள்...
3 நாள்களுக்கு ஒருமுறை இயக்கப்படும் ரயிலால், கேட் கீப்பர்கள் தற்போது அலைக்கழிக்கப்படுகின்றனர். ரயில்வே பணியாளருக்கு 8 மணி நேர வேலை என்ற நிலையில், திருவாரூரிலிருந்து காரைக்குடிக்கு பயணம் செய்து, மறுநாள் அங்கிருந்து புறப்பட்டால், இரண்டு நாள் வேலையை செய்வது போலாகி விடும். எனவே திருவாரூரிலிருந்து ரயிலில் புறப்படும் 4 கேட் கீப்பர்கள், பட்டுக்கோட்டையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலமாக திருவாரூர் வருகின்றனர். அதேநேரம், பட்டுக்கோட்டையிலிருந்து 4 கேட்கீப்பர்கள் காரைக்குடி செல்கின்றனர். இதனால், கேட்கீப்பர்களுக்கு அலைச்சல் ஏற்படுகிறது. இருமார்க்கத்திலிருந்து ரயில் இயக்கப்பட்டால், இவர்கள் பட்டுக்கோட்டையில் மாறிக் கொள்ள வாய்ப்புள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com