முல்லைப் பெரியாறில் 152 அடி நீரைத் தேக்க ஒத்துழைப்புத் தாருங்கள்: கேரளத்துக்கு முதல்வர் வேண்டுகோள்

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி அளவுக்கு நீரைத் தேக்கி வைக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கேரள அரசை தமிழக முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்


முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி அளவுக்கு நீரைத் தேக்கி வைக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கேரள அரசை தமிழக முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். 
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியின்போது கூறியது:
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி அளவுக்கு நீரைத் தேக்கி வைத்துள்ளோம். அணையின் பராமரிப்புப் பணிகளை தமிழகத்தால் மேற்கொள்ள முடியவில்லை. கேரள அரசு பல்வேறு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பிரச்னை நிலவுவதால் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக இருப்பது முல்லைப் பெரியாறுதான்.
எனவே, அணையில் நீரைத் தேக்கி வைக்கும் அளவினை 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்த தமிழகத்துக்கு கேரள அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கேரளத்தில் இடைமலையாறு திட்டம் முழுமை அடைந்துள்ளது. பணிகள் முடிந்ததற்கான சான்றை கேரள அரசு வழங்கினால் ஆனைமலையாறு, நீராறு, நல்லாறு திட்டங்களை தமிழகம் செயல்படுத்தும். இதனால், கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு நீர் அளிக்க முடியும். இதற்கு கேரள அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஆணையத்தை கலைப்பதா?: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், ராகுல் காந்தியோ, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்று பேசினார். 
இதற்கு மு.க.ஸ்டாலின் இதுவரை பதில் அளிக்கவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்பட்டால் தமிழகம் பாலைவனமாகி விடும்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. எனவே, அந்த அரசிடம் மு.க.ஸ்டாலின் பேசி காவிரி நதிநீர் பிரச்னையில் நீதிமன்றத் தீர்ப்புப் படி நடத்த அறிவுறுத்த வேண்டும். காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் தமிழகத்துக்கு ஒருசொட்டு நீர் கூட கிடைக்காது. எனவே, காவிரி நதிநீர் விவகாரத்தில் நம்முடைய உரிமையை நிலைநாட்டுவது காவிரி மேலாண்மை ஆணையம்தான் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com