காவிரி - குண்டாறு இணைப்பு: 67 ஆண்டு காலமாக  கனவாக இருக்கும் திட்டம்

வறண்டு கிடக்கும் மாவட்டங்களுக்கு உயிர்நீர்  பாய்ச்சும் வகையில், காவிரி உபரிநீரை புதுக்கோட்டை வழியாக விருதுநகர் மாவட்டத்தின் குண்டாறு வரை இணைக்கும் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்ப
காவிரி - குண்டாறு இணைப்பு: 67 ஆண்டு காலமாக  கனவாக இருக்கும் திட்டம்

வறண்டு கிடக்கும் மாவட்டங்களுக்கு உயிர்நீர்  பாய்ச்சும் வகையில், காவிரி உபரிநீரை புதுக்கோட்டை வழியாக விருதுநகர் மாவட்டத்தின் குண்டாறு வரை இணைக்கும் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் மீண்டும் எழுந்துள்ளது.
ஏறத்தாழ 67 ஆண்டுகாலக் கனவை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள். விவசாயம் மட்டுமே பிரதான தொழிலான புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைநீர் தவிர்த்த ஆற்றுப்பாசன வாய்ப்புகள் இல்லை. 
ஏறத்தாழ 17 லட்சம் மக்கள்தொகை எனக் கணக்கிடப்படும் இம்மாவட்டத்தில் சுமார் 5 லட்சம் பேர் வேலைக்காக வெளி மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. காரணம் கடந்த 8 ஆண்டுகளாக நிலவி வரும் கடுமையான வறட்சி. அதனால் பொய்த்துப்போன விவசாயம். 
கடந்த ஆண்டு பக்கத்தில் காவிரி ஓடியும், பெருமழைக் காலங்களில் நொடிக்கு ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் பெருக்கெடுத்தும் புதுக்கோட்டை மாவட்டம் வறண்டே கிடந்தது. இதற்கெல்லாம் நல்ல தீர்வாக, உயிர்நீரை காவிரியின் உபரிநீராக எடுத்துத் தருவதற்கான திட்டத்தை புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினர் கே.எம். வல்லத்தரசு 1952-ஆம் ஆண்டிலேயே மக்களவையில் பேசியிருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக 1982-களில் காவிரி உபரிநீர் பாசனக் குழு ஏற்படுத்தப்பட்டு, தற்போது வரை இக்குழு எம்ஜிஆர், கருணாநிதி, 

ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி வரை முதல்வர்களைச் சந்தித்து வலியுறுத்தி வந்திருக்கிறது. 

காவிரி உபரிநீர்த் திட்டம் குறித்து, தொடக்கத்தில் இக்குழுவின் பொருளாளராக இருந்து, தற்போது தலைவராக உள்ள ஜி.எஸ். தனபதி விவரிக்கிறார்:

எம்ஜிஆர் காலத்தில், நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் காவிரியாற்றில் இருந்து வாய்க்கால் வெட்டி புதுக்கோட்டைக்குத் தண்ணீர் வழங்க வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டது. அதன்பிறகு திமுக ஆட்சிக்காலத்தில் 1996-இல் திட்டத்தின் பெயரை கொள்ளிடம் உபரிநீர்த் திட்டம் என மாற்றி தயாரிக்க உத்தரவிட்டார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. காவிரி நடுவர் மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால் அந்த யோசனையை அவரே முன்வைத்தார். இதன் தொடர்ச்சியாக 2006-இல் ரூ. 294 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து கால்வாய் வெட்டுவதற்கு வசதியாக, கதவணை அமைக்கும் பணிகள் தொடங்கின. தொடக்கத்தில் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு தண்ணீர் தருவதற்கான திட்டமாகத் தொடங்கி, மெல்ல சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி என 5 மாவட்டங்களுக்கான திட்டமாக - தென்னிந்திந்திய நதிகள் இணைப்புக்கான முன்னோடித் திட்டமாக இது கடந்து வந்திருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, சிவகங்கையில் வைகை ஆறு, விருதுநகரில் குண்டாறில் வாய்க்காலை இணைப்பதுதான் திட்டம். தொடக்கத்தில் வெறும் ரூ. 125 கோடியில் தொடங்கி, பிறகு ரூ. 555 கோடியாகி, அதன்பிறகு ரூ. 1,500 கோடியாகி, தற்போது ரூ. 7 ஆயிரம் கோடியில் வந்து நிற்கிறது. கொள்கை அளவில் திட்டத்தை ஏற்றுக் கொண்டதாகவும் மொத்தமாக இத்தனைப் பெரிய தொகையை மாநில அரசு மட்டுமே ஒதுக்க முடியாது என்றும், மத்திய அரசு நிதி பெறுவதற்கு முயற்சிக்கிறோம் என்றும் முடிவு செய்திருக்கிறது தமிழக அரசு. இப்போதும் ஒரே நேரத்தில் ரூ. 7 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டியதில்லை. 5 ஆண்டுத் திட்டமாக படிப்படியாக நிதியை ஒதுக்கி, திட்டத்தை நிறைவேற்றினால் 5 மாவட்டங்கள் பயன்பெறும் என்கிறார் தனபதி. 

செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மூன்று மாதங்களில் சுமார் 60 நாள்களுக்கு நொடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் இந்த வாய்க்காலில் கிடைத்தால் போதும். 5 மாவட்டங்களிலுள்ள ஏரி, குளங்களை நிரப்பி ஓராண்டு விவசாயத்தைப் பாதுகாத்திட முடியும். புதுக்கோட்டையில் மட்டும் 600 குளங்கள் நிரம்பும். முப்போகம் விவசாயம் நடைபெறும். தமிழக அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்கிறார்கள் விவசாயிகள்.

கோதாவரி- காவிரி இணைப்பில் சிறு மாற்றம்

கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவதாக மத்திய பாஜக அரசு மீண்டும் மீண்டும் கூறி வரும் நிலையில், இத்திட்டத்தில் சிறு மாற்றத்தைச் செய்தால் கூடுதலாக சில மாவட்டங்கள் பலன்பெறும் என்பதை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் தெரிவித்திருக்கிறோம் என்றார் ஜி.எஸ். தனபதி. அதாவது, கோதாவரியிலிருந்து வெட்டப்படும் வாய்க்காலை கல்லணையில் இணைப்பதற்கு பதிலாக, கரூர் மாவட்டம் மாயனூரில் இணைத்தால் கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் பயன்பெறும் என விளக்கியிருக்கிறோம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com