பழனி பஞ்சாமிர்தத்துக்கு நாட்டுச் சர்க்கரை கொள்முதல்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

பழனி பஞ்சாமிர்தத்துக்கான நாட்டுச் சர்க்கரையை கவுந்தம்பாடி விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய கோயில்
பழனி பஞ்சாமிர்தத்துக்கு நாட்டுச் சர்க்கரை கொள்முதல்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்


பழனி பஞ்சாமிர்தத்துக்கான நாட்டுச் சர்க்கரையை கவுந்தம்பாடி விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் பழனி தண்டாயுதபாணி  கோயிலின் இணை ஆணையர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈரோடு மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், கவுந்தம்பாடி, கோபிச்செட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு விவசாயம் அதிகமாக நடைபெறுகிறது. இந்த பகுதிகளில் கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் நாட்டுச் சர்க்கரையில் ரசாயணப் பொருள்கள் கலக்காமல் இயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது. இதன் காரணமாக, பஞ்சாமிர்தம் தயாரிக்க பழனி கோயில் நிர்வாகம் எங்களது பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகளிடம் நாட்டுச் சர்க்கரையை நேரடியாக கொள்முதல் செய்து வந்தது. இதனால் பழனி பஞ்சாமிர்தத்தின் சுவையும், தரமும், குறையாமல் பக்தர்கள் பலனடைந்து வந்தனர். 
இந்த நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் நாட்டுச் சர்க்கரையை எங்கள் பகுதி விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்வதை பழனி கோயில் நிர்வாகம் நிறுத்தி விட்டது. தற்போது கோயில் நிர்வாகம் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நாட்டுச் சர்க்கரையை கொள்முதல் செய்து வருகிறது. ஒரு கிலோ நாட்டுச் சர்க்கரை ரூ.43-க்கு விற்பனைச் செய்யப்படுகிறது.
இதே சர்க்கரையை இடைத்தரகர்கள் இல்லாமல் கவுந்தம்பாடி, கோபிச்செட்டிப்பாளையம் பகுதி விவசாயிகளிடம் நேரடியாக வாங்கினால், ரூ.30-இலிருந்து ரூ.35 வரை கோயில் நிர்வாகத்துக்குச் செலவாகும். ஆனால் அரசு அதிகாரிகளும், கோயில் நிர்வாகமும் அதிக விலை கொடுத்து தரமற்ற நாட்டுச் சர்க்கரையை தனியாரிடமிருந்து கொள்முதல் செய்து வருகின்றனர். எனவே நாட்டுச் சர்க்கரையை கவுந்தம்பாடி, கோபிச்செட்டிப்பாளையம் பகுதி விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். 
இந்த மனு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக பழனி தண்டாயுதபாணி கோயில் தேவாஸ்தான இணை ஆணையர் ஒரு வார காலத்துக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com