கால்நடை- மீன்வளத் துறைக்கு ரூ.206 கோடியில் புதிய கட்டடங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

தமிழகத்தில் கால்நடை, மீன்வளம், பால்வளத் துறைக்கென ரூ.206 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வர் எடப்பாடி 
கால்நடை- மீன்வளத் துறைக்கு ரூ.206 கோடியில் புதிய கட்டடங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்


தமிழகத்தில் கால்நடை, மீன்வளம், பால்வளத் துறைக்கென ரூ.206 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வர் எடப்பாடி 
கே.பழனிசாமி திறந்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடந்தது.
இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாகப்பட்டினத்தில் மீனவளப் பொறியியல் கல்லூரி கட்டடம், கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் கிராமத்தில் மீன்பிடித் துறைமுகம், தூத்துக்குடி வேம்பார் கிராமத்தில் மீன் இறங்குதளம், தஞ்சாவூர் மல்லிப்பட்டினம் கிராமத்தில் மீன்பிடித் துறைமுகம், கரையூர்தெரு கிராமத்தில் வலைபின்னும் கூடம், உலர் மீன் சேமிப்பு அறை ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், கோவளத்தில் மீன் இறங்குதளம், கிருஷ்ணகிரியில் மேம்படுத்தப்பட்ட மீன்பண்ணை, நாகப்பட்டினம் நம்பியார் நகர் கிராமத்தில் மீன் ஏலக்கூடம், ஏலத்தளம், திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் கால்நடை பல்கலைக்கழகத்தில் அம்மா அரங்கம், திருவாரூர் மாவட்டம் குடவாசல், மன்னார்குடி, கடலூர் மேலபட்டாம்பாக்கம் ஆகிய இடங்களில் கட்டப்பட்ட கால்நடை மருத்துவமனைக் கட்டடங்களையும் முதல்வர் பழனிசாமி திறந்தார்.
உயர்கல்வித் துறை கட்டடங்கள்: உயர்கல்வித் துறை சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களும் திங்கள்கிழமை  திறக்கப்பட்டன. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு-கலை அறிவியல் கல்லூரிக் கட்டடம், கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கல்லூரி, அரசு மகளிர் கலைக் கல்லூரி, பர்கூர் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகக் கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஏ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் ஆய்வகக் கட்டடங்கள், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை -அறிவியல் கல்லூரியில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி, சென்னை சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாடு நிறுவனம், வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி, ஜார்ஜ்டவுன் பாரதி மகளிர் கல்லூரி, சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி, ஈரோடு பெருந்துறை பாலிடெக்னிக் கல்லூரி, கோவை அரசு பொறியியல் கல்லூரி, மேட்டுப்பாளையம் அரசு கலை- அறிவியல் கல்லூரி ஆகியவற்றுக்கு கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். மொத்தம் உயர் கல்வித் துறைக்காக ரூ.185.70 கோடியில் கட்டப்பட்ட கட்டடங்களை அவர் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com