தமிழகத்தில் ஜூலை18-இல் மாநிலங்களவைத் தேர்தல்: ஜூலை 1-இல் வேட்புமனு தொடக்கம்

 தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான அறிவிப்பு
தமிழகத்தில் ஜூலை18-இல் மாநிலங்களவைத் தேர்தல்: ஜூலை 1-இல் வேட்புமனு தொடக்கம்

 தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூலை 1-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய ஜூலை 8 கடைசி நாள். வாக்குப் பதிவு தேவையாக இருக்கும் பட்சத்தில் ஜூலை 18-இல் வாக்குப் பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 தமிழகத்தில் 18 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் உள்ளன. அவற்றில் டி.ரத்னவேல், வி.மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், ஆர்.லட்சுமணன் ஆகிய நான்கு அதிமுக உறுப்பினர்களுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜாவுடைய பதவிக் காலமும் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
மேலும், மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டதால், திமுக உறுப்பினர் கனிமொழி தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஏற்கெனவே ராஜிநாமா செய்தார். அவரது ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால், ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்கள் காலியாகவுள்ளன. பதவிக்காலம் முடிவடைய ஒரு மாதம் வரை அவகாசம் இருந்தாலும், புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதற்கான தேர்தல் அறிவிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் சார்புச் செயலாளர் பவன் திவான் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் ஜூலை 1-இல் தொடங்குகிறது. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய ஜூலை 8-ஆம் தேதி கடைசி. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூலை 9-இல் நடைபெறும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் ஜூலை 11. வாக்குப் பதிவு தேவை இருப்பின் ஜூலை 18-இல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அதே நாளில் மாலை 5 மணிக்கு நடைபெறும். தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் ஜூலை 22-இல் நிறைவடையும்.
சுதந்திரமாக... வெளிப்படையாக...: மாநிலங்களவைத் தேர்தலை சுதந்திரமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்த வேண்டும். தேர்தலை உன்னிப்பாக கவனிக்க பார்வையாளர்களை நியமிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்புச் செயலாளர் பவன் திவான் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்தல் பார்வையாளர்: மாநிலங்களவைத் தேர்தலை நடத்தும் பணிகளை சட்டப் பேரவைச் செயலகம் மேற்கொள்ளும். தேர்தல் தொடர்பான அனைத்துப் பணிகளையும் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் கண்காணிக்க தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நியமிக்கப்பட உள்ளார். தேர்தல் குறித்த அனைத்து உத்தரவுகளும் கண்காணிப்பு அதிகாரி சாகு வழியாக சட்டப் பேரவைச் செயலகத்துக்கு தெரிவிக்கப்படும்.
வாக்கெடுப்புக்கு வாய்ப்பில்லை: மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேட்பாளர் ஒருவர் 34 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற வேண்டும். அதன்படி, பேரவையில் 123 எம்எல்ஏக்களை வைத்துள்ள அதிமுகவும், தனது எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 108 எம்எல்ஏக்களை வைத்துள்ள திமுகவும் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை இடங்களை சரிபாதியாக பிரித்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று இடங்களைப் பிரித்துக் கொள்ள திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 102 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இரண்டு கட்சிகளுக்கும் தேவையான எண்ணிக்கையில் எம்எல்ஏக்களின் பலம் இருப்பதால் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஆறில் சரிபாதியாக தலா மூன்று இடங்களை அதிமுகவும், திமுகவும் பிரித்துக் கொள்ளும் என பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், வாக்குப் பதிவு என்பது தவிர்க்கப்படும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com