ஆரோக்கிய வாழ்வுக்கு தீய பழக்கங்களை கைவிட வேண்டும்: இளைஞர்களுக்கு ஆளுநர் அறிவுரை

இளைஞர்கள் போதைப் பழக்கங்களைக் கைவிட்டு முறையான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பதே ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழி என்று  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.
ஆரோக்கிய வாழ்வுக்கு தீய பழக்கங்களை கைவிட வேண்டும்: இளைஞர்களுக்கு ஆளுநர் அறிவுரை


இளைஞர்கள் போதைப் பழக்கங்களைக் கைவிட்டு முறையான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பதே ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழி என்று  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.
அடையாறு புற்றுநோய் மையம் சார்பில் இளைஞர் ஆரோக்கியத் திருவிழா  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. அதனை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற தொற்றா நோய்களின் தாக்கம் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. உலக அளவில் அந்த வகை நோய்களுக்கு 1.5 கோடி பேர் உயிரிழப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 இந்தியாவில் விநாடிக்கு 10 பேர் தொற்றா நோய்களுக்கு பலியாகின்றனர். அவர்களில் 85 சதவீதம் பேர் நடுத்தர வகுப்பையும், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பையும் சேர்ந்தவர்கள் என்பது வருத்தத்துக்குரிய விஷயம். இந்த நிலையை மாற்ற வேண்டும். தொற்றா நோய்களை முதலிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் 80 சதவீதம் பேரை உயிரிழப்பிலிருந்து காப்பாற்ற முடியும். 
ஆனால், அதற்கு உரிய விழிப்புணர்வு அவசியம். பெருகி வரும் நகரமயமாக்கத்தினாலும், வாழ்க்கை முறை மாற்றத்தாலும்தான் தொற்றா நோய்களுக்கு பலர் ஆளாகின்றனர். புகை, மது, துரித உணவுகள் என உடலுக்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் அவர்கள் நோய்களைத் தேடிப் பெற்றுக் கொள்கின்றனர். புகையிலைப் பழக்கத்துக்கு ஆளான 50 சதவீதம் பேர் அதன் எதிர் வினைகள் குறித்து அறிந்துள்ளனர். ஆனாலும்கூட அவர்களால் அப்பழக்கத்தில் இருந்து விடுபட முடிவதில்லை. இது ஒருபுறமிருக்க, உடல் பருமன் இன்றைக்கு பரவலாகக் காணப்படுகிற ஒரு நோயாக விளங்குகிறது. போதிய உடற்பயிற்சி இல்லாததே அதற்கு முக்கிய காரணம். ஆரோக்கியமான வாழ்வுக்கு முறையான உடற்பயிற்சி, உணவுப் பழக்கம் வேண்டும். அதேபோன்று தீய பழக்கங்களை கைவிட வேண்டும் என்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இந்த நிகழ்ச்சியில் அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைவர் டாக்டர் சாந்தா, இயக்குநர் டாக்டர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com