ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: திருச்சியில் விவசாயிகள் நூதனப் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர்


ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ. விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், மேல்சட்டை அணியாமலும், கைகளில் திருவோடு ஏந்தியபடி, தலையில் முக்காடு இட்டு பங்கேற்றனர்.
 விளைநிலங்களை பாதிக்கும் திட்டங்களை கைவிட  வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பிய அவர்கள்,  தொடர்ந்து விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில்  மாவட்ட ஆட்சியர் சு. சிவராசுவை சந்தித்து தங்கள் கோரிக்கையை  முதல்வருக்கு அனுப்புமாறு மனு அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பூ. விசுவநாதன் கூறியது:
சுற்றுச்சூழலுக்கும், விளைநிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஹைட்ரோகார்பன், மீத்தேன், எட்டு வழிச்சாலை என விவசாயிகளை போராட்டத்தில் ஈடுபடுத்தும் வகையிலான திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசும் உடந்தையாக இருந்து செயல்படுகிறது. விவசாயிகளைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம். நாகப்பட்டினம், நெடுவாசல், கதிராமங்கலத்தில் விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாகத் தொடராத நிலையில் உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் தொடர்ந்து அனுமதியளித்து வருவது கண்டிக்கத்தக்கது.
இது ஏற்கெனவே போராடி வரும் விவசாயிகளிடம் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, அரியலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து ஹைட்ரோகார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த முயலும் நிறுவனங்கள் உடனடியாக வெளியேற வேண்டும். நடப்பு பேரவைக் கூட்டத் தொடரிலேயே இத்தகைய திட்டங்களை அனுமதிக்க முடியாது என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com