குடியரசுத் தலைவருக்கு கோவையில் வரவேற்பு

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க  ஞாயிற்றுக்கிழமை கோவைக்கு  வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, தமிழக ஆளுநர், அமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
கோவை வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை மலர்கொத்து கொடுத்து வரவேற்கிறார்  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
கோவை வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை மலர்கொத்து கொடுத்து வரவேற்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க  ஞாயிற்றுக்கிழமை கோவைக்கு  வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, தமிழக ஆளுநர், அமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

கோவை மாவட்டம், சூலூர் விமானப் படைத் தளம் மற்றும் ஈஷா யோக மையத்தில் திங்கள்கிழமை (மார்ச் 4) நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனி விமானம் மூலம் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில்  வந்தார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி உள்ளிட்டோர் சால்வை அணிவித்து, மலர் கொத்து அளித்து  வரவேற்றனர். பின்னர்,  குடியரசுத்தலைவர் அங்கிருந்து  புறப்பட்டு ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்றார். அங்கு மாலை 6 மணி முதல் 6.30 மணி வரையில் முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேசினார்.

திங்கள்கிழமை காலை 8 மணிக்கு கார் மூலம் சூலூர் செல்லும் குடியரசுத் தலைவர், அங்குள்ள விமானப் படைத் தளத்தில் உள்ள பணிமனைக்கு சிறந்த அங்கீகாரத்துக்கான கொடியை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று,  விமானப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, விமான சாகச நிகழ்ச்சிகளைப் பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து அரசு விருந்தினர் மாளிகைக்குத் திரும்புகிறார். தொடர்ந்து, மாலை 4.40 மணிக்கு   கோவை விமான நிலையத்திலிருந்து, ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோக மையம் செல்கிறார். 

அங்குள்ள தியானலிங்கம், லிங்கபைரவி, ஆதியோகி சிலை, சூர்யகுண்டம் உள்ளிட்டவற்றைப் பார்வையிடுகிறார்.  பிறகு, ஆதியோகி சிலை அமைந்துள்ள இடத்தில் அமைக்கப் பட்டுள்ள ஒலி, ஒளிக் காட்சியைத் தொடங்கிவைக்க உள்ளார். இரவு 7 மணிக்கு கோவைக்கு திரும்புகிறார். செவ்வாய்க்கிழமை காலை தனி விமானம் மூலம் தில்லி திரும்புகிறார்.  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையையொட்டி கோவையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com