அதிமுக கொடுக்கும் இடங்களை வாங்கிக்கொள்ள தேமுதிக முடிவு?

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தனித்து விடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதால்,  அதிமுக கூட்டணியிடம் இனியும் பேரம் பேசாமல், கொடுக்கும் இடங்களை வாங்கிக் கொள்ளும் முடிவுக்கு
அதிமுக கொடுக்கும் இடங்களை வாங்கிக்கொள்ள தேமுதிக முடிவு?


நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தனித்து விடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதால்,  அதிமுக கூட்டணியிடம் இனியும் பேரம் பேசாமல், கொடுக்கும் இடங்களை வாங்கிக் கொள்ளும் முடிவுக்கு தேமுதிக வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில்,  அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
2019 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் பிரதான கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில், அதிமுக கூட்டணியில் தேமுதிகவும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கியதுபோல,  எங்களுக்கும் 7 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தேமுதிக கேட்டது. அதன் பிறகு 5 தொகுதிகளாவது கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத அதிமுக நிர்வாகிகள், 4 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் எனத் தெரிவித்ததாகத் தெரிகிறது.
இதில் அதிருப்தியடைந்த தேமுதிக நிர்வாகிகள், சென்னையில் புதன்கிழமை பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சென்னை தனியார் ஓட்டலில் சந்தித்து அதிமுகவுடனான கூட்டணி தொடர்பாகப் பேச்சு நடத்தினர். அந்தப் பேச்சுவார்த்தையின்போதே, தேமுதிகவின் இளங்கோவன்,  முருகேசன் மற்றும் சில நிர்வாகிகள், திமுக பொருளாளர் துரைமுருகனை அவருடைய சென்னை இல்லத்தில் சந்தித்து, கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
இவ்வாறு, இரண்டு தரப்பிலும் ஒரே நேரத்தில் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரின் கடும் விமர்சனத்துக்கு தேமுதிக ஆளானது.
இந்நிலையில், தேமுதிகவுக்கு தொகுதிகளை ஒதுக்க,  திமுகவிடம் இனி இடங்கள் இல்லை. எனவே, தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க வாய்ப்பே இல்லை என திமுக தரப்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது. 
இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் திமுக நிச்சயம் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினும் திட்டவட்டமாக வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டார். 
இந்த அறிவிப்புகள் மூலம், தேமுதிகவுக்கான திமுக கதவு மூடப்பட்டது திட்டவட்டமானது. அதுபோல, தனது பேரத்துக்கு அதிமுகவை படிய வைக்க தேமுதிக எடுத்த தொடர் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதனால், மக்களவைத் தேர்தலில் தேமுதிக,  கொடுப்பதை வாங்கிக்கொண்டு அதிமுக கூட்டணிக்குச் செல்லவேண்டும் அல்லது தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்தச் சூழலில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை கட்சி நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார். இதில், அதிமுக ஏற்கெனவே கொடுப்பதாக அறிவித்த 4 மக்களவைத் தொகுதிகளை வாங்கிக்கொண்டு, அந்தக் கூட்டணியில் இணைந்து கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தனித்துப் போட்டியிட்டாலோ அல்லது மக்கள் நீதி மய்யம், அமமுக போன்ற புதிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலோ மக்களவைத் தேர்தலில் பெரிய அளவில் சோபித்துவிட முடியாத என்பதை உணர்ந்தே இந்த முடிவை தேமுதிக தலைமை எடுத்திருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com