தமிழகத்தில் 5,125 புதிய பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தொடங்க தடை நீடிப்பு

தமிழகத்தில் 5,125 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் புதிதாக அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிக்கான இடைக்காலத் தடையை நீக்க


தமிழகத்தில் 5,125 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் புதிதாக அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிக்கான இடைக்காலத் தடையை நீக்க சென்னை  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த வெங்கிடுசாமி தாக்கல் செய்த மனு:
தமிழகத்தின்  ஊரகப் பகுதிகளில் பெட்ரோல் பங்குகளை தொடங்குவதற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம்,  ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் 2018 நவம்பர்  2018 நவம்பர் 25-இல்  அறிவிப்பு வெளியிட்டன.  
தமிழகத்தில் 2018 ஏப்ரல் 1 ஆம் தேதி நிலவரப்படி தனியார் பங்குகள் உட்பட 5 ஆயிரத்து 388 பெட்ரோல் பங்குகள் உள்ளன. 
இந்நிலையில்  தற்போது புதிதாக,  5 ஆயிரத்து 125 பெட்ரோல் பங்குகளைத் தொடங்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. 
அரசியல் அழுத்தத்தில், முறையாக ஆய்வு செய்யப்படாமல் எடுக்கப்பட்ட இந்த முடிவு சுற்றுச்சூழல் மற்றும் பொதுநலனைப் பாதிக்கும். பெட்ரோல் பங்குகளுக்கு தடையின்மைச் சான்று வழங்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதை மாவட்ட நிர்வாகங்கள் கருத்தில் கொள்ளாமல், தடையின்மைச்  சான்று வழங்கி வருகின்றன.
பெட்ரோல் நுகர்வு மற்றும் தேவை குறித்து கணக்கீடு செய்யாமல் பெட்ரோல் பங்குகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளனர். இதனால் ஏற்கெனவே பெட்ரோல் பங்குகள் வைத்திருப்போர் பாதிக்கப்படுவர்.  பெட்ரோலுக்கான மாற்று எரிபொருள் கொள்கையை மத்திய அரசு அறிவித்திருக்கும்போது,  பெட்ரோல் பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது முரண்பாடாக இருக்கிறது.  ஆகவே, புதிதாக  பெட்ரோல் பங்குகள் அமைப்பது தொடர்பான  ஒப்பந்தப்புள்ளி அறிவிப்புக்கு தடை விதித்தும், பெட்ரோல் பங்குகள் அமைப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்து ஆராய நிபுணர் குழுவை அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என  மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது,  எண்ணெய் நிறுவனங்களின் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் வாதிடுகையில்,  புதிய பெட்ரோல் பங்குகள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு முறையாக வெளியிடப்பட்டிருக்கிறது. ஆகவே, நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை நீக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், நியாயமான காரணம்  எதுவும் இல்லையெனக் கூறி இடைக்காலத் தடையை நீக்க மறுப்பு தெரிவித்தனர்.  இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com