பொள்ளாச்சி விவகாரத்தில் உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பொள்ளாச்சி விவகாரத்தில் உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் 

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 6 வருடங்களில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள், இளம் பெண்களை, ஒரு சமூக விரோதக் கும்பல், காதல் வலையில் சிக்க வைத்து, ஆபாச படமெடுத்து, சுற்றுக்கு விட்டு குற்றம் இழைத்த அதிர்ச்சிகரமான சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.  அதிமுக ஆட்சியில் இத்தகைய சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இத்தகைய சம்பவத்திற்கு காவல்துறையும், அதிமுகவின் உயர்மட்டப் பொறுப்பில் உள்ளவர்களின் ஒத்துழைப்புடனேயே இக்கொடுமைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இச்சம்பவங்கள் மீது எடப்பாடி அரசு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கோடு நடந்து கொள்வது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். உள்ளூர் காவல்துறைக்குத் தெரியாமலோ அல்லது ஆளும் கட்சியின் ஆசியும், ஈடுபாடும் இல்லாமலோ இது நீடித்து நடந்திருக்க வாய்ப்பில்லை.

ஆளும் அதிமுகவின் உயர்மட்ட பிரமுகரின் குடும்ப உறுப்பினர் பெயர் இதில் அடிபடுகிறது. தமிழகத்தில்  அனுதினமும் நடக்கும் பாலியல் வன்கொடுமை கொடூரங்களைக் கண்டு கொள்ளாத அதிமுக,  திடீரென பொள்ளாச்சி பிரச்னையில் மட்டும் தன் நாடாளுமன்ற உறுப்பினரை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வற்புறுத்தியுள்ளது ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. புகார் கொடுத்த பெண்ணின் சகோதரனைத் தாக்கிய அதிமுக உள்ளூர் முக்கியஸ்தர் பார் நாகராஜன் மீது அப்போதே நடவடிக்கை எடுக்காமல், வெகுஜன நிர்ப்பந்தம் அதிகமான பிறகு, இப்போது கட்சியை விட்டு நீக்கியிருப்பதும் கேள்விகளை உருவாக்குகிறது. நாகராஜன் மீது வெறும் அடிதடி வழக்கு பதிவு செய்து, ஸ்தல காவல்துறை திட்டமிட்டு உண்மைகளை மறைக்கிறது என்று அறிய முடிகிறது. குற்றவியல் சட்டப் பிரிவு 161ன் படி, பாலியல் குற்றங்களை ஒரு பெண் போலீஸ் அதிகாரி தான் விசாரிக்க வேண்டும், ஆனால் ஆண் அதிகாரி விசாரித்ததாகவே தகவல் கிடைக்கிறது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஊடக சந்திப்பு நடத்தி, மொபைல் போன்களில் குற்றச்செயல்களின் பதிவு இல்லை, அரசியல் பிரமுகர்கள்  ஈடுபாடு இல்லை என்று கூறுவதும், அமைச்சர், அதிமுக உயர்மட்ட பிரமுகர் மீது குற்றம் சாட்டும் வலைத்தளவாசிகள் மீது சைபர் குற்றப் பிரிவு மூலம் அவசர அவசரமாக நடவடிக்கை எடுப்பதும் கூட பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. அருப்புக்கோட்டை நிர்மலா தேவி வழக்கைப் போலவே, உயர்மட்ட குற்றவாளிகளை விட்டு விட்டு, கிடைத்தவர்களை மட்டும் சிக்க வைப்பது என்ற நிலைமை இதிலும் தெரிகிறது. இதுவரை 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனநாயக மாதர் சங்கமும், அனைத்துக் கட்சிகளும் இப்பிரச்னையில் தலையிட்டு கண்டன இயக்கம் நடத்தியுள்ளன. சட்ட ரீதியான தலையீட்டுக்கும் ஏற்பாடு நடக்கிறது.

இச்சம்பவத்தை நேரில் சென்று விசாரிப்பதற்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.சுகந்தி, மாவட்டச்செயலாளர் ஏ.ராதிகா, கட்சியின் கோவை மாவட்டச்செயலாளர் வி.ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட விசாரணைக்குழு நாளை (13-3-2-2019) பொள்ளாச்சிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தவுள்ளது.

அதிமுக ஆட்சியில் தொடர்ந்து பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்து வருவதும், அரசின் பாராமுகமும் தமிழகத்தில் மோசமான சட்டம்  ஒழுங்கு சூழலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.  இச்சூழலில், உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணை நடத்துவதே உண்மைகளை வெளிக்கொண்டு வர உதவும். பாதிக்கப்பட்ட பெண்கள் தயக்கமின்றி புகார் கொடுக்க உகந்த சூழலை ஏற்படுத்த வேண்டும். அக்குடும்பங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது.

இந்த அநீதியை எதிர்த்து கட்சியின் மாவட்டக்குழுக்கள் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com