எவ்வளவு பணம் எடுத்துச் செல்லலாம்? தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள நிலையில், பொது மக்கள் எவ்வளவு பணம் எடுத்துச் செல்லலாம், எவ்வாறு எடுத்துச் செல்லலாம் என்பது குறித்து வருமான வரித் துறையினருடன் தமிழக தலைமைத் தேர்தல்
வருமான வரித்துறை இணை இயக்குநர் எம்.முரளிமோகன்,  காவல்துறை இயக்குநர் எச்.எம்.ஜெயராம் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு. 
வருமான வரித்துறை இணை இயக்குநர் எம்.முரளிமோகன்,  காவல்துறை இயக்குநர் எச்.எம்.ஜெயராம் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு. 


தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள நிலையில், பொது மக்கள் எவ்வளவு பணம் எடுத்துச் செல்லலாம், எவ்வாறு எடுத்துச் செல்லலாம் என்பது குறித்து வருமான வரித் துறையினருடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ரொக்கமாக பணத்தை எடுத்துச் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் விவரங்களை, வருமான வரித் துறையினர் தமிழகத் தேர்தல் துறை அதிகாரிகளிடம் வியாழக்கிழமை விளக்கினர். 
வருமான வரித் துறை இணை இயக்குநர் முரளி மோகன், காவல் துறை தலைவர் ஜெயராம் உள்ளிட்டோர் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு உடனான ஆலோசனையில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள்:
பொது மக்களோ, அரசியல் கட்சியினரோ ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமான தொகையை வாகனங்களில் எடுத்துச் செல்லக் கூடாது.  வாகனங்களில் எடுத்துச் செல்லும் கட்சி தொடர்பான போஸ்டர்கள், தேர்தல் தொடர்பான பொருள்கள், மதுபானம், பரிசுப் பொருள்கள் போன்றவற்றின் மதிப்பு ரூ.10 ஆயிரத்தைத் தாண்டக் கூடாது. 
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, தமிழகம் முழுவதும் வாகனங்களில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு சோதனைகள் நடத்தப்படும் போது, விடியோ படம் பிடிக்கப்படுகிறது.
இவ்வாறு பிடிக்கப்படும் விடியோ காட்சிகள் அடங்கிய குறுந்தகட்டை பொது மக்கள் ரூ.300 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
நட்சத்திர பிரசாரம் செய்வோர்: தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர் தனது தனிப்பட்ட செலவுகளுக்காக ரூ.1 லட்சம் வரை வைத்துக் கொள்ளலாம். ஆனால், அதுகுறித்த சான்றினை கட்சியின் பொருளாளரிடம் இருந்து பெற்று அதனை உடன் வைத்திருக்க வேண்டும். 
இவ்வாறு சான்றுடன் ரூ.1 லட்சம் வரை வைத்திருக்கும் நட்சத்திர வேட்பாளர் அல்லது பேச்சாளரின் பணம் பறிமுதல் செய்யப்பட மாட்டாது. 
ரூ.10 லட்சம் வரை வாகனங்களில் கொண்டு செல்லப்படும்போது, அதுகுறித்த உரிய ஆவணங்கள் இருப்பது, அதன் மீது எந்த சந்தேகமும் ஏற்படாத பட்சத்தில் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட மாட்டாது. 
அதேசமயம், அந்தப் பணம், எங்கு யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்ற தகவல் வருமான வரித் துறைக்குத் தெரிவிக்கப்படும். 
உரிய ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்படும் பணம் குறித்த புகாரை, பறிமுதல் செய்த 24 மணி நேரத்துக்குள் பதிவு செய்ய வேண்டும்.
பணம் எப்போது திரும்பக் கிடைக்கும்: பொது மக்களிடம் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்படும் பணம் உள்ளிட்ட பொருள்களின் தன்மை குறித்து ஆய்வு செய்ய ஒவ்வொரு மாவட்ட அளவில் மூன்று அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. 
மாவட்ட கருவூல அதிகாரி,  ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர், செலவினப் பார்வையாளரின் தொடர்பு அதிகாரி ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பர். 
இந்தக் குழுவானது பறிமுதல் செய்யப்படும் பணம் தொடர்பான ஆவணங்களைச் சரிபார்க்கும். ஆவணங்கள் உரிய முறையில் இருந்தால் உடனடியாக பணத்தை விடுவிக்க அந்தக் குழு உத்தரவிடும் என்று தேர்தல் துறையும், வருமான வரித் துறையும் இணைந்து அறிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com