கரும்புத் தோட்டத்தில் கொத்தடிமையாக இருந்த 23 பேர் மீட்பு

தஞ்சாவூர் அருகே கரும்புத் தோட்டத்தில் கொத்தடிமையாக இருந்து வேலை பார்த்த 23 பேர் வியாழக்கிழமை மீட்கப்பட்டனர்.
தஞ்சாவூர் அருகே கொத்தடிமையாக இருந்து வியாழக்கிழமை மீட்கப்பட்டவர்கள்.
தஞ்சாவூர் அருகே கொத்தடிமையாக இருந்து வியாழக்கிழமை மீட்கப்பட்டவர்கள்.


தஞ்சாவூர் அருகே கரும்புத் தோட்டத்தில் கொத்தடிமையாக இருந்து வேலை பார்த்த 23 பேர் வியாழக்கிழமை மீட்கப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகேயுள்ள நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர் தஞ்சாவூர் அருகே குருங்குளத்தில் கரும்பு சாகுபடி செய்து வருகிறார். 
இவரது கரும்புத் தோட்டத்தில் கொத்தடிமையாகப் பலர் வேலை பார்த்து வருவதாகப் புதுக்கோட்டை கோட்டாட்சியர் தண்டாயுதபாணிக்கு தகவல் வந்தது. இதுகுறித்து தஞ்சாவூர் கோட்டாட்சியர் சி. சுரேசுக்கு புதுக்கோட்டை கோட்டாட்சியர் தகவல் அளித்தார்.
இதையடுத்து, தஞ்சாவூர் கோட்டாட்சியர் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலகு ஒருங்கிணைப்பாளர் நா. நடராஜன், தேசிய ஆதிவாசி தோழமை கழக ஒருங்கிணைப்பாளர் ராணி, ஆய்வாளர் முத்துகண்ணன் ஆகியோர் நிகழ்விடத்தில் விசாரித்தனர். 
அப்போது, கரும்பு வெட்டும் வேலைக்காக, கடலூர் மாவட்டம், திருவிதிகையைச் சேர்ந்த முகவர் எம். சேகர் மூலம் 3 மாதங்களுக்கு முன்பு கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 23 பேர் அழைத்து வரப்பட்டதும், முகவர் சேகரிடம் இவர்கள் ரூ. 50,000 முதல் ரூ. 80,000 வரை கடன் பெற்றதும், அதனால், இவர்களை சேகர் கொத்தடிமையாக்கி கூலி வேலைக்கு அனுப்பி வைப்பதும்   தெரிய வந்தது.
இதையடுத்து, கொத்தடிமைகளாக இருந்த 10 ஆண்கள், 5 பெண்கள், 8 குழந்தைகள் என 23 பேர் மீட்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் 11 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பின்னர், இவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com