ராமதாஸ் - விஜயகாந்த் சந்திப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் வியாழக்கிழமை நேரில் சந்தித்து பேசினர்.
சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்.
சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்.


தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் வியாழக்கிழமை நேரில் சந்தித்து பேசினர்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பாமகவைப் போன்று தங்கள் கட்சிக்கும் 7 இடங்கள் ஒதுக்க வேண்டும் என, தேமுதிக கேட்டு வந்ததால் கூட்டணி ஏற்படுவதில் இழுபறி நீடித்த நிலையில், கடந்த வாரம் தேமுதிக - அதிமுக கூட்டணி உறுதியானது. தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.  அதைத் தொடர்ந்து, தேமுதிக - பாமகவுக்கு  தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடிப்பதாகக் கூறப்படுகிறது. இரு  கட்சிகளும், ஒரே தொகுதிகளைக் கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில், பாமக  நிறுவனர்  ராமதாஸ், கட்சித் தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, அதிமுக நிர்வாகி கோகுலஇந்திரா உள்ளிட்டோர் வியாழக்கிழமை கூட்டாகச் சந்தித்தனர்.  மக்களவைத் தேர்தல்  நடைபெறவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.  சந்திப்பின்போது, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
தேமுதிகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம்:  சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்புக்குப் பிறகு  ராமதாஸ்   அளித்த பேட்டி:  விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிக்கவே இங்கு வந்தோம். சந்திப்பு நல்லபடியாகவே முடிந்தது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. பொதுவாக, அனைத்துத் தேர்தல்களின்போதும் தொகுதிகள் ஒதுக்குவதில் காலதாமதம் ஏற்படும்.  தற்போதும் அந்தத் தாமதம்தான் எங்கள் கூட்டணியிலும் நிலவுகிறது. தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் பிரசாரம் செய்வோம் என்றார் அவர்.
கடந்த காலங்களில், எதிரெதிர் நிலையில் நின்று தேர்தல்களைச் சந்தித்த பாமக - தேமுதிக இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்தது. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாமக, தேமுதிக  ஒரே கூட்டணியில் இருந்தாலும் அதன் பிறகு,  இரு கட்சிகளுக்கு இடையே விரிசல் தொடரவே செய்தது.  இந்த நிலையில்தான் 5 ஆண்டுகளுக்கு பிறகு, விஜயகாந்த் - ராமதாஸ் சந்திப்பு தற்போது நிகழ்ந்துள்ளது.  இந்தச் சந்திப்புக்குப் பிறகு தொகுதிப் பங்கீடு தொடர்பாக சுமுக தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com