416 அஞ்சல் நிலையங்களில் விரைவில் எல்இடி விளக்குகள் விற்பனை: உஜ்ஜலா திட்டத்தின் கீழ் நடவடிக்கை

உஜ்ஜலா திட்டத்தின் கீழ், தமிழகம், புதுச்சேரியில் உள்ள  416 அஞ்சல் நிலையங்களில் எல்இடி- விளக்குகள், குழல்விளக்குகள், மின்விசிறி  ஆகியவை சலுகை விலையில் விற்பனை செய்யப்படுமென தமிழக அஞ்சல் துறை


உஜ்ஜலா திட்டத்தின் கீழ், தமிழகம், புதுச்சேரியில் உள்ள  416 அஞ்சல் நிலையங்களில் எல்இடி- விளக்குகள், குழல்விளக்குகள், மின்விசிறி  ஆகியவை சலுகை விலையில் விற்பனை செய்யப்படுமென தமிழக அஞ்சல் துறை  முடிவு செய்துள்ளது.
மின்சாரத்தை சேமிப்பதில் எல்இடி- விளக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எல் இடி-விளக்குகளை பயன்படுத்துவதன் மூலம், மின்சிக்கனத்தை கடைப்பிடித்து தேவைக்கும், உற்பத்திக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன் ஒருபகுதியாக, உஜ்ஜலா திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ்,  மத்திய மின்துறை அமைச்சக நிர்வாகத்தின் கீழ், எரிசக்தி சேமிப்பு சேவை நிறுவனம்(இஇஎஸ்எல்) செயல்படுகிறது. இந்த நிறுவனம்,  பொதுத்துறை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, பொதுமக்களுக்கு சலுகை விலையில் மேற்கூறிய மின்சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. 
இந்நிலையில், உஜ்ஜலா திட்டத்தின் கீழ்,  அஞ்சல் நிலையங்கள் மூலமாக  தள்ளுபடி  விலையில் விநியோகம் செய்ய எரிசக்தி திறன் சேவை நிறுவனம் திட்டமிட்டது.  இதையடுத்து, தமிழக அஞ்சல் துறையுடன் எரிசக்தி திறன் சேவை நிறுவனம், கடந்த 8-ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, தமிழகம், புதுச்சேரியில் உள்ள 416 அஞ்சல் நிலையங்களில் எல்இடி விளக்கு, குழல் விளக்கு, மேற்கூரை மின்விசிறி ஆகியவை சலுகை விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன.
இது குறித்து தமிழக வட்ட முதன்மை அஞ்சல்துறை தலைவர் எம்.சம்பத் கூறியது:  இந்த ஒப்பந்தப்படி, தமிழகம், புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 416 அஞ்சல் நிலையங்கள் மூலமாக விற்பனை செய்யப்படவுள்ளன. இது படிப்படியாக விரைவு படுத்தப்படும்.  சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் உள்ள தலைமை அஞ்சல் நிலையங்களுக்கு,  எல்இடி  பல்பு, எல்இடி  டியூப் லைட், சீலிங் ஃபேன் ஆகியவற்றை எரிசக்தி திறன் சேவை நிறுவனம் விநியோகம் செய்யும். அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் இந்தப் பணி ஒரு வாரத்தில் தொடங்கும். இப்பொருட்களை வாங்க ஏதாவது ஒரு அடையாள அட்டையை வாடிக்கையாளர்கள் கொண்டுவர வேண்டும். இந்தத் திட்டம் மூலமாக, மின்சார நுகர்வு குறைவதுடன், மின் கட்டணம் கணிசமாக குறைந்து,  வாடிக்கையாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்றார் அவர்.
விலை கணிசமாக குறையும்: இது குறித்து அஞ்சல் துறை அதிகாரிகள்  கூறியது:  9 வாட் கொண்ட எல்இடி- பல்பு  விலை ரூ.70 ஆகவும்,  20 வாட் கொண்ட எல்இடி- டியூப் லைட் விலை  ரூ.220 ஆகவும், சீலிங் ஃபேன் விலை  ரூ.1,100 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, கடைகளில் ஒரு எல்இடி- பல்ப் விலை சராசரியாக ரூ.110 ஆகவும், எல்இடி- டியூப் லைட் விலை சராசரியாக  ரூ.330 முதல் ரூ.360 ஆகவும், சீலிங் ஃபேன் விலை சராசரியாக  ரூ.1,600 ஆகவும் உள்ளது.  எனவே,  அஞ்சல் நிலையங்கள் மூலமாக சலுகை விலையில் பொதுமக்கள் வாங்கமுடியும்   என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com