ராகுல்காந்தியை விமர்சிக்க எனக்கு எல்லா தகுதியும் உள்ளது: கே.எஸ். அழகிரிக்கு தமிழிசை பதிலடி 

அடிமட்ட தொண்டனாக படிப்படியாக அரசியலில் உயர்ந்த தனக்கு, குடும்ப அரசியலில் இருந்து வந்த ராகுல்காந்தியை விமர்சிக்க எல்லா தகுதியும்
ராகுல்காந்தியை விமர்சிக்க எனக்கு எல்லா தகுதியும் உள்ளது: கே.எஸ். அழகிரிக்கு தமிழிசை பதிலடி 

சென்னை: அடிமட்ட தொண்டனாக படிப்படியாக அரசியலில் உயர்ந்த தனக்கு, குடும்ப அரசியலில் இருந்து வந்த ராகுல்காந்தியை விமர்சிக்க எல்லா தகுதியும் இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்த தமிழிசைக்கு அரசியல் வரலாற்றை அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றும், இலங்கை தமிழர் பிரச்னையைப் பற்றி தமிழிசை நீலிக் கண்ணீர் வடிக்கிறார். மேலும் இலங்கை தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி செயல்பட்டதை எவரும் மறந்திருக்க முடியாது என்றும் ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் தான் இன்றைக்கும் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருப்பதை தமிழிசையால் மறுக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பிய கே.எஸ். அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை விமர்சிக்க எந்த தகுதியும்  இல்லாதவர் தமிழிசை சௌந்தரராஜன் என கூறியிருந்தார். 

இந்நிலையில், கே.எஸ். அழகிரி கூறியதற்கு தமிழிசை பதிலளித்துள்ளார். அதில், காமராஜரை புகழ பாஜகவிற்கு  என்ன உரிமை எனக் கேட்கும் உங்களுக்கு காமராஜர் காலத்திலேயே  காமராஜரை கைவிட்டுவிட்டு இந்திரா காங்கிரஸ்க்கு ஓடிப்போன கோஷ்டியிலிருந்து வந்ததே தகுதி என தலைவரான உங்களுக்கு காமராஜரை பற்றி பேச தகுதி இருக்கிறது என நீங்கள் நினைக்கும் போது தேசிய குடும்பத்தில் பிறந்து, தேசிய கட்சியில் பணியாற்றும் எனக்கு எல்லா தகுதி உள்ளது.

கார்த்திக் சிதம்பரம் காமராஜர் பெயரை சொல்லி எத்தனை நாளுக்கு அரசியல் செய்ய போகிறீர்கள் என சத்யமூர்த்தி பவனில் பேசியபோது உங்களுக்கு வராத கோபம் நாங்கள் காமராஜர் புகழ்பாடும் போது வருவது ஏன்?

பெயில் குடும்ப வாரிசுகளின் ஆசிபெற்றவர் என்ற தகுதியில் தலைவரான நீங்கள் என் தலைமைத் தகுதியை விமர்சிக்கிறீர்கள். இந்திரா கொண்டு வந்த அவசரகால பிரகடனமே காமராஜரின் ஆயுளுக்கு எமன் ஆனது என்பது வரலாறு.

இந்திரா காந்தியை மதுரையில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதோடு அவர் சிந்திய ரத்தத்தை பெண்மையின் மாண்பை ஆபாசமாக விவரித்த திமுகவுடன் கூட்டு வைக்கும் நீங்கள் அதே திமுக தான் காமராஜர் அவர்கள் தேர்தலில் போட்டயிடும் போது அவருக்கு எதிராக ஒரு மாணவனை நிறுத்தி சிறுமைப்படுத்தியது.

அதே திமுகவுடன் கூட்டணி வைக்கும் நீங்கள் காமராஜரை பற்றி பேசலாமா?

பிரதமர் நரேந்திர மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் போது காமராஜர் இருந்திருந்தால் என்னுடைய இந்த செயலை மிகவும் பாராட்டியிருப்பார் என்று கூறினார்கள்.

நீங்கள் கூறும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட காங்கிரஸ் கலைக்கப்பட்டு விட்டது. இப்போதுள்ள காங்கிரஸ் ஊழல் நிறைந்த காங்கிரஸ் என்றவர், இந்திய குடிமகன் என்ற முறையில் எனக்கு ராகுல்காந்தியை விமர்சிக்க எல்லா தகுதியும் இருக்கிறது. இந்த விஷயம் கே.எஸ். அழகிரிக்கு புரியாவிட்டாலும் மக்களுக்கு நன்றாகவே புரியும் என தமிழிசை தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com