கல்லூரி நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்ற விவகாரம்: விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம்

சென்னை, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாக, மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

சென்னை, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாக, மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
 இதுகுறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சனிக்கிழமை அளித்த பேட்டி: கல்லூரி, பள்ளி வளாகங்களில் தேர்தல் பிரசாரங்களை நடத்த சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் அனுமதி இருந்தாலே போதும். ஆனால், அந்தக் கல்வி நிறுவன வளாகத்தில், சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்களை வைத்தே நிகழ்ச்சியை நடத்தியதாக, தமிழக பாஜக சட்டப் பிரிவைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், மாவட்டத் தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி ஆணையாளருமான பிரகாஷிடம், தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவரது விளக்கத்துக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
 மாநிலம் முழுவதும் ரூ.4.88 கோடி ரொக்கம் பறிமுதல்: வெள்ளிக்கிழமை (மார்ச் 15) வரையில், தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வாகனத் தணிக்கைகளின் மூலமாக ரூ.4.88 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அதில், வெள்ளிக்கிழமை மட்டும் ரூ.73.85 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
 அனைத்து மாவட்டங்களிலும் வாகனச் சோதனைகள் நடத்தப்படுவதால், ஒவ்வொரு மாவட்டத்திலும் பறிமுதல் செய்யப்படும் ரொக்கத் தொகையின் விவரங்கள் தேர்தல் துறையால் தினமும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
 அந்த வகையில், இதுவரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் ரூ.1.28 கோடியும், திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.93.62 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்வது, புகார்கள் அளிப்பது போன்றவற்றுக்காக சிவிஜில் என்ற செல்லிடப்பேசிச் செயலி வழியாக 297 புகார்கள் பெறப்பட்டன. இந்தச் செயலியில், புகைப்படம் அல்லது விடியோக்களை புகார்களாகப் பதிவேற்றம் செய்யலாம். மேலும், சுவர் விளம்பரங்கள் அகற்றப்படாமல் இருந்தாலும் அதுகுறித்து, சிவிஜில் மூலமாக தேர்தல் துறையின் கவனத்துக்குக் கொண்டு வரலாம். இவ்வாறு பெறப்பட்ட புகார்களில் 38 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. நடவடிக்கைக்காக 81 புகார்கள் நிலுவையில் உள்ளன. மீதமுள்ள புகார்கள் கைவிடப்பட்டுள்ளன.
 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்காக 8 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில், 66 சதவீத விண்ணப்பங்கள் மீது மேல் நடவடிக்கை எடுத்து, உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதில், வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம்.
 மீதமுள்ள 2.75 லட்சம் விண்ணப்பங்கள் ஆய்வில் உள்ளன. தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற கட்டணமில்லாத தொலைபேசியில் தெரிவிக்கலாம். இந்த எண் மூலம், இதுவரை 44 ஆயிரத்து 240 அழைப்புகள் பெறப்பட்டு, உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளன என்றார் சத்யபிரத சாகு.
 அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்றுஆலோசனை
 சட்டம்-ஒழுங்குப் பிரச்னையும் இல்லாமல் நடத்த, மாநில தேர்தல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள்,பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியர்கள்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து காவல் ஆணையர்களுடன், தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு, ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அதில், சட்டம்-ஒழுங்கு நிலவரம், தேர்தலை அமைதியாக நடத்துவதற்கான அம்சங்கள், தேர்தல் அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே ஒருங்கிணைப்பு உள்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com