மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 4-இல் தொடக்கம்: ஏப். 17-இல் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

 மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான  மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 17-ஆம் தேதியும்,
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் (கோப்புப் படம்)
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் (கோப்புப் படம்)


 மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான  மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 17-ஆம் தேதியும், தேரோட்டம் 18-ஆம் தேதியும்,  அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ஏப்ரல் 19-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மதுரை சித்திரைத் திருவிழா உலகப் புகழ் பெற்றது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள்  பங்கேற்பது வழக்கம்.
இந்தாண்டு சித்திரைத் திருவிழா ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஏப்ரல் 4-ஆம் தேதி வாஸ்து சாந்தி, நிலத்தேவர் வழிபாடு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து ஏப்ரல் 8-ஆம் காலை  கொடியேற்றத்துடன் முதல் நாள் திருவிழா தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து ஏப்ரல் 8- முதல் 19-ஆம் தேதி வரை சுவாமி மற்றும் அம்மன் தினசரி காலை மற்றும் இரவு பல்வேறு வாகனங்களில் நான்கு மாசி வீதிகளில் வீதி உலா நடைபெறுகிறது.  ஏப்ரல் 9-ஆம் தேதி தங்க சப்பர வாகனம்,  பூத,  அன்ன வாகனம், ஏப்ரல் 10-ஆம் தேதி தங்க சப்பர வாகனம், கைலாச பர்வதம், காமதேனு வாகனம், ஏப்ரல் 11-ஆம் தேதி  தங்கப்பல்லக்கு வாகனம், ஏப்ரல் 12-ஆம் தேதி தங்க சப்பர வாகனம், தங்கக் குதிரை வாகனம், 13-ஆம் தேதி தங்கம், வெள்ளி ரிஷப வாகனம், 14-ஆம் தேதி சிம்மாசனங்களில் நந்திகேஸ்வரர், யாழி வாகனம், 15-ஆம் தேதி பட்டாபிஷேகமும், 16-ஆம் தேதி திக் விஜயமும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 17-ஆம் தேதி (புதன்கிழமை) காலை நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 8 மணிக்கு கல்யாணக் கோலத்தில் சுவாமி, அம்மன் பூப்பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஏப்ரல் 18-ஆம் தேதி காலை 5.45 மணிக்கு சுவாமி, அம்மன் தேரோட்டம் நடைபெறுகிறது. ஏப்ரல் 19-ஆம் தேதி தீர்த்தவாரி,  தேவேந்திர பூஜையுடன் இரவு அம்மன், சுவாமி, ரிஷப வாகனத்தில் புறப்பாடு செய்வதுடன் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
கள்ளழகர் மதுரை புறப்பாடு: அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவையொட்டி அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் திருக்கல்யாண மண்டபத்துக்கு ஏப்ரல் 15-இல் எழுந்தருள்கிறார். ஏப்ரல் 17-இல் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகர் அங்கிருந்து மாலை 6 மணிக்கு மதுரைக்கு புறப்படுகிறார். ஏப்ரல் 18 காலை 6 மணிக்கு மதுரை மூன்று மாவடி பகுதியில் பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டழைக்கும் எதிர்சேவை நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 9.30-க்கு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் திருமஞ்சனமாகிறார். தொடர்ந்து ஏப்ரல் 19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை)  தல்லாகுளம் கோயிலில் இருந்து அதிகாலையில் புறப்படும் கள்ளழகர் அதிகாலை 5.45-இல் இருந்து 6.15-மணிக்குள் ஆற்றில் எழுந்தருள்கிறார். இதையடுத்து ஏப்ரல் 20-இல் ராமராயர் மண்டகப்படியில் இரவு முழுவதும் தசாவதாரம் நிகழ்ச்சியும், ஏப்ரல் 21-இரவு தல்லாகுளம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகும் சுவாமி, 22-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு பூப்பல்லக்கில் புறப்பட்டு ஏப்ரல் 23-ஆம் தேதி  காலை 10.30 மணிக்கு அழகர்கோயிலை சென்றடைகிறார். ஏப்ரல் 24-ஆம் தேதி உற்சவ சாந்தியுடன் கள்ளழகர் திருவிழா நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com