முடங்கிய வங்கிக் கணக்குகளில் பணப் பரிவர்த்தனைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்

முடங்கிய வங்கிக் கணக்குகளில் பணப் பரிவர்த்தனைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்

பணப் பரிவர்த்தனை நடைபெறாமல் முடங்கிக் கிடக்கும் வங்கிக் கணக்குகளில் அதிகளவு பரிவர்த்தனைகள் நடந்தால் அதனைக் கண்காணிக்க வேண்டும் என வங்கி அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் 


பணப் பரிவர்த்தனை நடைபெறாமல் முடங்கிக் கிடக்கும் வங்கிக் கணக்குகளில் அதிகளவு பரிவர்த்தனைகள் நடந்தால் அதனைக் கண்காணிக்க வேண்டும் என வங்கி அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவுறுத்தியுள்ளார்.
 தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் புதன்கிழமை அளித்த பேட்டி:-
வாகனத்தில் கட்சிக் கொடியைப் பயன்படுத்த சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். அரசியல் கட்சியினர் கூட்டணி கட்சியின் சின்னங்களை வாகனத்தில் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி பெற வேண்டும். தேர்தல் நடத்தை நெறிமுறைகள் தொடர்பாக அனைத்து வங்கி அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
இதில் வங்கிக் கணக்கு மற்றும் பண பரிவர்த்தனைகள் குறித்து தொடர் கண்காணிப்பு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. நீண்ட நாள்கள் பயன்படுத்தாமல் இருக்கும் வங்கிக் கணக்குகளில் திடீர் பண வரவு குறித்து கண்காணித்து அது குறித்த தகவல்களை வருமான வரித் துறைக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஏ.டி.எம்., இயந்திரங்களுக்கு பணம் கொண்டு செல்லும் வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கி வரையறுத்துள்ள ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். பணம் எடுத்துச் செல்வது தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். இந்த விதி அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். 
ஆன்லைன் மூலம் ரூ.10 லட்சத்துக்கு மேல் பணப் பரிமாற்றம் இருந்தாலும் அது குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மேல் பரிமாற்றம் நடைபெற்றாலும் வருமான வரித்துறை கண்காணிக்கும். 
இதுவரை ரூ.12.80 கோடி பணம் பறிமுதல்: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்ததையடுத்து வாகனச் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 
இந்தச் சோதனைகளின் காரணமாக இதுவரை ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.12 கோடியே 80 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் ரூ. 3 கோடியே 76 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
கரூரில் ரூ. 5 கோடியே 6 லட்சம் மதிப்புள்ள 94 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 1.8 கிலோ வெள்ளி மற்றும் மதுபான பாட்டில்கள், சிறிய பரிசு பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பணம் பறிமுதல் தொடர்பாக இதுவரை 2 ஆயிரத்து 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் பணியில் 3.45 லட்சம் ஊழியர்கள்: பொது  இடங்களில் (அரசு அலுவலகங்கள் உள்பட) 1.61 லட்சம் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தனியார் இடங்களில் 1.28 லட்சம் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. 
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணியில் 3.45 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கு முதல் கட்டமாக வரும் 24-ஆம் தேதி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களை அதிகரிப்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் தேர்தல் ஆணையத்திலிருந்து வரவில்லை. 
சிவிஜில் செயலி: தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் அனைத்துச் செலவுகள் குறித்தும் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்புவர். சிவிஜில் செயலி மூலமாக பொதுமக்கள் புகார்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் புகார் பதிவு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட இடம், நேரம் அனைத்தும் தெளிவாக ஆணையத்துக்கு வந்துவிடும். பொதுமக்கள் இதில் புகார்களை அனுப்பினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 470 விடியோ, புகைப் படங்கள் புகாராக வந்துள்ளன. இவற்றில் 154 புகார்கள் தேவையற்ற வகையில் இருந்ததால் அவை நீக்கப்பட்டன. 78 புகார்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. 119 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 3 ஆயிரத்து 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளர்.
அனுமதி பெற்று துப்பாக்கி வைத்துள்ள 21 ஆயிரம் பேர்களில் இதுவரை 8,379 பேர் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். 28 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாகனச் சோதனையில் இரட்டைக் குழல் துப்பாக்கி ஒன்றும், கை துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com