மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மதுரையில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மக்களவைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரியும், பெரிய வியாழன் தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவ பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளை வேறு இடத்துக்கு மாற்றக்
மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்


மதுரையில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மக்களவைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரியும், பெரிய வியாழன் தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவ பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளை வேறு இடத்துக்கு மாற்றக் கோரியும் தொடரப்பட்ட  வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.  எனவே மதுரை தேர்தல் தேதியில் மாற்றமில்லை.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பார்த்தசாரதி என்பவர் மதுரையில் ஏப்ரல் 18-ஆம் தேதி சித்திரைத் திருவிழா நடைபெற உள்ளது. எனவே, அதே நாளில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். 
அதேபோல் சென்னை உயர்நீதிமன்றத்தில், மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளன்று, பெரிய வியாழன் தினம் வருவதால் கிறிஸ்தவப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, தமிழ்நாடு பிஷப் கவுன்சில் தலைவர் அந்தோணி பாப்புசாமி வழக்குத் தொடர்ந்திருந்தார். மேலும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிர்வாக அறங்காவலர் இனிகோ இருதயராஜ் சார்பில் தேர்தல் தேதியை மாற்றக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 
இந்த வழக்கு விசாரணையின்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில், மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அங்கு வாக்குப்பதிவு நேரம் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரிய வியாழன் தினத்தை கடைப்பிடிக்கும் கிறிஸ்தவர்களுக்கு எந்த விதத்திலும் இடையூறு இருக்காது. அன்றைய தினம் வாக்குச்சாவடி மையங்களில் உள்ள தேவாலயங்களுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு பிரத்யேகமாக தடுப்பு வேலிகளுடன் பாதை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்திருந்தது. 
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. தேர்தலை ஒத்திவைக்க கோரிய இரண்டு வழக்குகள், வாக்குச்சாவடிகளை இடமாற்றக் கோரிய வழக்கு உள்ளிட்ட 3 வழக்குகளையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com