தமிழகத்தில் மலைகள், சாலைகளில் பேனர்கள் வைக்க உச்ச நீதிமன்றம் தடை விதிப்பு

தமிழகத்தில் மலைகள், சாலைகளில் பேனர்கள் வைக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மலைகள், சாலைகளில் பேனர்கள் வைக்க உச்ச நீதிமன்றம் தடை விதிப்பு


புது தில்லி: தமிழகத்தில் மலைகள், சாலைகளில் பேனர்கள் வைக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில் மலைகள், காடுகள், சாலைகளில் அரசியல் கட்சிகள் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் அரசியல் விளம்பரத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பினை தமிழக அரசு முறையாக செயல்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக யானை ஜி. ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் 2017, செப்டம்பர் 20-ஆம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், நெடுஞ்சாலை அரசியல் விளம்பரங்களுக்கு தடை கோரிய வழக்கில் பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் தவறிவிட்டது. குறிப்பாக, இதுபோன்ற விளம்பரங்கள் மேம்பாலங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகளின் நடுவில் உள்ள தடுப்புகள், பாறைகள் போன்றவற்றில் செய்யப்படுகின்றன. குறிப்பாக, இவற்றில் 90 சதவீத விளம்பரங்கள் அரசியல் கட்சிகளால் செய்யப்படுகின்றன. இது தொடர்பாக சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் ஆய்வு செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அதிகாரிகள் பின்பற்றவில்லை. ஆய்வு மேற்கொண்டிருந்தால் உண்மை தெரியவந்திருக்கும். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் 2017, மார்ச் 3-ஆம் தேதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. 

இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிமன்றம் மத்திய வனம், சுற்றுச்சூழல், தலைமைத் தேர்தல் ஆணையர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோரும் தமிழகத்தில் உள்ள 17 அரசியல் கட்சிகளும் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டது. 

இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ். அப்துல் நசீர், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, தமிழக அரசின் சார்பில் வழக்குரைஞர் யோகேஷ் கண்ணாவும், மனுதாரரும் வழக்குரைஞருமான யானை ராஜேந்திரனும் ஆஜராயினர். இதைத் தொடர்ந்து நீதிபதிகள், அரசியல் வாசகங்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் படங்கள் அடங்கிய விளம்பரங்களால் சுற்றுச்சூழல் கெடுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. இதுபோன்ற விளம்பரங்களைத் தடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பாறைகள், மலைகள், குன்றுகள், பொதுக் கட்டடங்கள் ஆகியவற்றின் அழகை கெடுக்கும் அல்லது உருக்குலையச் செய்யும் வகையில் வரையப்பட்டுள்ள அரசியல் தலைவர்களின் உருவப் படங்களுடன்கூடிய அரசியல் சார்ந்த விளம்பரங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தமிழக அரசு 2 வாரங்களுக்குள் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், மலைகள், சாலைகள், காடுகளில் அரசியல் விளம்பரங்கள் வைக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com