இணையதளத்தைக் கட்டுப்படுத்தும் மென்பொருள் விழிப்புணர்வு: மத்திய தொலைத் தொடர்புத் துறை செயலர் ஆஜராக உத்தரவு

இணைய சேவை வழங்க உரிமம் பெற்றவர்கள்,  பெரன்டல் விண்டோ என்ற மென்பொருள் குறித்து ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தக்


இணைய சேவை வழங்க உரிமம் பெற்றவர்கள்,  பெரன்டல் விண்டோ என்ற மென்பொருள் குறித்து ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய தொலைத் தொடர்புத் துறை செயலர், இணைய சேவை வழங்குவோர் நலச் சங்க செயலர் ஆகியோர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இது குறித்து, மதுரையைச் சேர்ந்த விஜயகுமார் தாக்கல் செய்த மனு:  இணையதளத்தின் பயன்பாட்டால் உலகம் சுருங்கி ஒவ்வொருவரின் உள்ளங்கைக்கு வந்துவிட்டது. இந்நிலையில், இணையதளத்தினால் தீங்குகளும்  அதிகரித்து வருகின்றன. ஆபாச இணையதளங்களைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மேலும், ஆபத்தான இணையதள விளையாட்டுக்களால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பெரன்டல் விண்டோ என்ற மென்பொருளைப் பயன்படுத்தி  இணையதள முகவரியை  தடை செய்து கட்டுப்படுத்தலாம். இந்த மென்பொருள் குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது இணைய சேவை வழங்குவோரின் கடமையாகும்.  எனவே, இணைய சேவை வழங்க உரிமம் பெற்றவர்கள், பெரன்டல் விண்டோ மென்பொருள் குறித்து ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட  வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய தொலைத் தொடர்புத் துறை செயலர்,இணைய சேவை வழங்குவோர் நலச் சங்க செயலர்  ஆகியோர் பதில் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே இருவரும் ஏப்ரல் 8 ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com