பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: கீழமை நீதிமன்றத்தை அணுக உத்தரவு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும்


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் உள்துறைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாக கீழமை நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டது.  
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சூர்யபிரகாசம் தாக்கல் செய்த மனுவில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பலரை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரை காவல்துறை கைது செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த கோவை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பண்டியராஜன், இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் அந்த மாணவி படிக்கும் கல்லூரியின் பெயரையும் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்த அரசாணையில் அந்த மாணவியின் பெயர், கல்லூரி பெயரும் வெளிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு அதிகாரிகளின் செயல்களும் இந்திய தண்டனை சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அதிகாரிகளுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கலாம். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக காவல்துறை டிஜிபியிடம் புகார் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக காவல்துறை டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும், இதுபோன்ற வழக்குகளை கீழமை நீதிமன்றத்தில் தான் தொடர வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர் கீழமை நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com