மக்களவைத் தேர்தல்: 40 பொதுப் பார்வையாளர்கள் இன்று வருகை- தூத்துக்குடிக்கு மட்டும் இருவர் நியமனம்

மக்களவைத் தேர்தலை ஒட்டி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கு 40 பொதுப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது பணிகளை செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) தொடங்கவுள்ளனர்.
மக்களவைத் தேர்தல்: 40 பொதுப் பார்வையாளர்கள் இன்று வருகை- தூத்துக்குடிக்கு மட்டும் இருவர் நியமனம்


மக்களவைத் தேர்தலை ஒட்டி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கு 40 பொதுப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது பணிகளை செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) தொடங்கவுள்ளனர்.
முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் மக்களவைத் தொகுதிகளில் ஒன்றான தூத்துக்குடிக்கு மட்டும் இரண்டு பொதுப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைகிறது. தேர்தலை ஒட்டி நடத்தை விதிகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் ரொக்கப் பணம், நகைகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை வரை 209 கிலோ தங்கமும், 317  கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் நபர்களிடம் அவை திருப்பி அளிக்கப்பட்டு வருகின்றன.
டோக்கன்கள் விநியோகம்: கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோல் நிரப்பிக் கொள்வதற்கான 100 டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டதாக தகவல் பெறப்பட்டுள்ளது. அதில், கடலூரில் அதிமுகவும், நாகப்பட்டினத்தில் திமுக சார்பிலும் விநியோகிக்கப்பட்டதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து தகவல்கள்  கிடைத்துள்ளன.
தேர்தல் பணியில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் 6 முதல் 7 சதவீதம் பேர் கலந்து கொள்ளவில்லை. அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு தேர்தல் பணி என்பது கட்டாயமாகும். மருத்துவ ரீதியான பிரச்னைகள் இருந்தால் மட்டுமே தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். தேர்தல் காலத்தில் அனைத்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுவர். எனவே, தேர்தல் பணியில் ஈடுபட மறுக்கும் ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுப் பார்வையாளர்கள் நியமனம்: மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிக்க செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைவதால், பொதுப் பார்வையாளர்களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 39 மக்களவைத் தொகுதிகளுக்கு 40 பொது பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது, ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஒரு பொதுப் பார்வையாளர் வீதம் 39 பேருடன், தூத்துக்குடி தொகுதிக்கு கூடுதலாக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்று, சட்டப் பேரவை இடைத்தேர்தல்கள் நடைபெறும் 18 தொகுதிகளுக்கும் தலா ஒரு பொதுப் பார்வையாளர் வீதம் 18 பொதுப் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று, சட்டம், ஒழுங்குப் பணிகளை கண்காணிக்க இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரு காவல் பார்வையாளர் வீதம் 20 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களவை, சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் மொத்தமாக பொதுப் பார்வையாளர்கள், காவல் பார்வையாளர்கள் என 78 பேர் செவ்வாய்க்கிழமை தமிழகம் வரவுள்ளனர் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com