ஆலங்குளம் அருகே கார்-லாரி மோதல்: 5 பேர் பலி

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே செவ்வாய்க்கிழமை காலை காரும், லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு குழந்தை
விபத்தில் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்த கார்.
விபத்தில் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்த கார்.


திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே செவ்வாய்க்கிழமை காலை காரும், லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருநெல்வேலி, மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பொன்னையா மகன் முருகன் (52). இவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதார மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார். இவரது மகன் மகேஷுக்கு கொக்கிரகுளத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, மணமக்களுக்கும், உறவினர்களுக்கும்  விருந்து கொடுக்கும் பொருட்டு, ஆலங்குளம் அருகே அடைக்கலபட்டணம் கிராமத்தில் உள்ள பெயர்பெற்ற கறிக்கடைக்குச் செல்வதற்காக, முருகன், அவரது மருமகன்கள் சத்தியமங்கலம் ரெங்கசமுத்திரத்தைச் சேர்ந்தவரும், பெங்களூரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவருமான ஜெயராஜ் மகன் நிரஞ்சன்குமார் (29), ஈரோட்டைச் சேர்ந்தவரும், அமெரிக்காவில் பொறியாளராகப் பணியாற்றி வந்தவருமான முத்துசாமி மகன் ராஜசேகர் (35), அவரது 3 வயது மகள் தனிஷ்கா, இவர்களது உறவினர் களக்காடு நடராஜன் (60) ஆகிய 5 பேரும் கேடிசி நகரில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றனர்.
காரை ராஜசேகர் ஓட்டியுள்ளார். கார் ஆலங்குளம் அருகேயுள்ள கரும்புளியூத்தை அடுத்துள்ள தனியார் செவிலியர் கல்லூரி அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மீது நேருக்குநேர் மோதியது. இதில், காரில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தொடர்ந்து, சடலங்களை மீட்க வெகுநேரமானதால், திருநெல்வேலி-தென்காசி சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து நேரிட்ட இடத்திற்கு ஆலங்குளம் டி.எஸ்.பி.  சுபாஷினி, வட்டாட்சியர் கந்தப்பன், காவல் ஆய்வாளர் செல்வக்குமார்,  தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராகவன் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். போலீஸார் சடலங்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து ஆலங்குளம்  போலீஸார் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநர் கடலூர் மாவட்டம், உறையூர் காசிநாதன் மகன் கணேஷ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 
காரணம்: விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் கூறுகையில், திருமண வீட்டார் பல்வேறு வேலைகளில் தூக்கமில்லாமல் இருந்திருக்கலாம். மறுநாளும் அதிகாலையிலேயே காரில் பயணம் செய்ததால், தூக்கமின்மை மற்றும் அலுப்பு காரணமாக கார் ஓட்டியவருக்கு தூக்கம் வந்திருக்கலாம். இதுபோன்ற நேரங்களில் சற்று கண் அயர்ந்தால்கூட விபத்து நேரிட வாய்ப்புகள் அதிகம். எனவே, வாகனம் ஓட்டுவோருக்கு ஓய்வு மிகமிக அவசியம் என்றனர்.
அதிகம்பேரை பலிகொள்ளும் சாலை: திருநெல்வேலி மாவட்டத்தில் வாகன விபத்துகளில் அதிக உயிரிழப்பு ஏற்படுத்தும் சாலையாக திருநெல்வேலி - ஆலங்குளம் சாலை உள்ளது. 
கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுதோறும் நேரிடும் விபத்துகளில் 5, 6, 9 பேர் என கொத்துக்கொத்தாக பலர் உயிரிழந்துள்ளனர். 18 ஆண்டுகளுக்கு முன்பு இச்சாலையில் நேரிட்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க, போக்குவரத்துக்கு ஏற்ப சாலையை மேம்படுத்துவது அவசியம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com