தொழிலாளர்களுக்கு திமுக தான் காவலாளி, மோடி அல்ல: மு.க.ஸ்டாலின்

தொழிலாளர்களுக்கு திமுக தான் காவலாளி, மோடி அல்ல என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
தொழிலாளர்களுக்கு திமுக தான் காவலாளி, மோடி அல்ல: மு.க.ஸ்டாலின்

தொழிலாளர்களுக்கு திமுக தான் காவலாளி, மோடி அல்ல என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மே தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடியில் பேரணியாகச் சென்று சிதம்பர நகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றக் கூட்டத்தில் மே தின உரையாற்றினார். 

அதில், இன்று மே 1ம் நாள். இந்த மே 1ம் நாளை தொழிலாளர்களின் தினமாக நாம் தொடர்ந்து கொண்டாடி வருகின்றோம். நாம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நாடுகளில் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வெற்றி கண்டு, மீண்டும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கக்கூடிய அந்த தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய நாளாக, இந்த மே 1ம் நாள் விளங்கிக் கொண்டிருக்கின்றது. தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்தால் தான், அந்த உரிமைகள் உரிமையோடு நம்மிடத்தில் வந்து சேர்ந்திட முடியும் என்பதை அறிவிக்கக்கூடிய நாளாக மே 1ம் நாள் விளங்கிக் கொண்டிருக்கின்றது. எனவே அந்த உரிமைகளை ஒரு ஜனநாயக தன்மையோடு பெற்றிட வேண்டும் என்பதற்காகத்தான் தொடர்ந்து, இந்த மே 1ம் நாளை நாம் கொண்டாடி வருகின்றோம்.

இதைக் கொண்டாடுவதற்கு எல்லா வகைகளிலும் உரிமை படைத்திருக்கக்கூடிய ஒரு இயக்கம் உண்டு என்று சொன்னால் அது நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றுதான் என்பதை நான் பெருமையோடு தெரிவிக்க விரும்புகின்றேன். நாட்டின் பிரதமராக இருக்கக்கூடிய மோடி சொல்லலாம். நான் தான் இந்த நாட்டின் காவலாளி என்று. ஆனால் பிரதமர் மோடியை பொறுத்தவரையில் நாட்டின் காவலாளி அல்ல நாட்டின் களவாணியாக அவர் விளங்கிக் கொண்டு இருக்கின்றார். திராவிட முன்னேற்றக் கழகம் தான், இந்த நாட்டின் காவலாளியாக - ஒட்டுமொத்த தொழிலாளர்களின் காவலாளியாக தொடர்ந்து விளங்கி கொண்டிருக்கின்றது. அப்படிப்பட்ட உரிமையோடு இன்றைக்கு நாம் இந்த மே 1ம் நாளை கொண்டாடி வருகின்றோம்.

ஒவ்வொரு ஆண்டும் தலைவர் கருணாநிதி மே 1ம் தேதியை நம்முடைய தொழிற்சங்கத்தின் சார்பில் கொண்டாடிட வேண்டும். கழக அமைப்புகளின் சார்பில் இதை சிறப்பித்திட வேண்டும் என்பதற்காக தலைவர் கருணாநிதி தொடர்ந்து மே 1ம் நாளில் அவரே முன்னின்று கொண்டாடிய வரலாறுகள் எல்லாம் உண்டு.

சென்னை நேப்பியர் பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கக்கூடிய மே தின நினைவுச் சின்னம். அந்த மே தின நினைவுச் சின்னம் உருவாக்கியதற்கு ஒரு வரலாறு உண்டு.

தலைவர் கருணாநிதி, மே 1ம் நாள் மே தின நினைவுச் சின்னம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்திருக்கக்கூடிய நேப்பியர் பூங்காவில் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் உறுதிமொழி தந்தார்கள்.

முதல்வர் உத்தரவு போட்டு விட்டால் போதும் அமைச்சர்களோ, அதிகாரிகளோ அதனை நிறைவேற்றிடும் கடமையாக இருந்திட வேண்டும். ஆனால், தலைவர் கருணாநிதி உத்தரவிட்டது மட்டுமில்லாமல் அந்த நினைவுச் சின்னம் எப்படி அமைந்திட வேண்டும், எந்த நிலையில் அது இருந்திட வேண்டும், என்பதை அவரே வரைபடம் தயாரித்து அந்த வரைபடத்தின் மூலமாக உருவாக்கப்படக்கூடிய சின்னம் முறையாக அமைந்திருக்கின்றதா என்று  ஒரு முறை அல்ல பல முறை அந்த இடத்திற்கு நேரடியாக சென்று அதைப் பார்த்து சரி செய்து, அந்த நினைவுச் சின்னம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அதனை கண்காணித்த பெருமையும் நம்முடைய தலைவர் கருணாநிதிக்கு உண்டு.

அதன் பிறகு அந்த நினைவுச் சின்னத்தை அவரே முன்னின்று திறந்து வைத்தார்கள். திறந்து வைத்த நேரத்தில் மே தின நினைவுச் சின்னம் அமைந்திருக்கக்கூடிய நேப்பியர் பூங்கா என்பது இன்று முதல் மே தின பூங்கா என அழைக்கப்படும் என்ற உத்திரவையும் வழங்கினார். எதற்காக நான் இவற்றையெல்லாம் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்று சொன்னால், இந்த தொழிலாளர்களுக்கு இருக்கக்கூடிய அந்த உரிமைகளை தொடர்ந்து நிலைநாட்டிட வேண்டும் என்பதற்காக தலைவர் கருணாநிதி எடுத்துக்கொண்ட அக்கறையை நீங்கள் உணர்ந்து பார்த்திட வேண்டும். அதுமட்டுமல்ல மே 1ம் நாள் என்பது தொழிலாளர்களின் தினமாக இருந்தாலும், முதன்முதலில் 1967ல் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து, அறிஞர் அண்ணா பொறுப்பேற்றதற்குப் பிறகு மே 1ம் நாள் அரசு விடுமுறை என்று அறிவித்தார்கள். அண்ணா அவர்களின் மறைவிற்குப் பிறகு தலைவர் கருணாநிதி பொறுப்பேற்றதற்கு பிறகு, அண்ணா அவர்கள் அறிவித்தது அரசு விடுமுறை மட்டும் தான், ஆனால் அண்ணா வழி நின்று ஆட்சி நடத்தக்கூடிய தலைவர் கருணாநிதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள்.

இனி அரசு விடுமுறை மட்டுமல்ல ஊதியத்தோடு கூடிய அரசு விடுமுறை என்று தலைவர் கருணாநிதி அறிவித்தார்கள். அதற்குப் பின்னால் மாநில அளவில் ஊதியத்தோடு கூடிய விடுமுறை என்பது, வெறும் மாநில அளவில் இருந்துவிடக்கூடாது அது நாடு தழுவிய அளவில் இருந்திட வேண்டும். மத்திய அரசு அலுவலர்களுக்கும் அது பொருந்திட வேண்டும் என்று அன்றைக்கு இந்திய நாட்டின் பிரதமர் பொறுப்பில் இருந்த சமூக நீதி காவலராக விளங்கிய விபி.சிங்கிடம் தலைவர் கருணாநிதி வாதிட்டு, போரிட்டு அதன்பிறகு மாநில அளவில் இருந்த மே 1ம் நாள் ஊதியத்தோடு கூடிய அரசு விடுமுறை என்பது மத்திய அளவிலும் வழங்கப்படும் என்று விபி.சிங்களால் அறிவிக்கப்பட்டது என்று சொன்னால், அதற்கும் காரணம் நம்முடைய தலைவர் கருணாநிதி தான் என்பதை நான் இங்கு பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனவே, மே 1ம் நாளை பொறுத்தவரையில், அதுவும் 2019ஆம் ஆண்டை பொறுத்தவரையில் இன்றைக்கு இந்த விழாவை கொண்டாடுகின்றோம் என்று சொன்னால் இதில் ஒரு மிகப்பெரிய வரலாற்று சிறப்பு ஒன்று உண்டு. என்னவென்று கேட்டால், தொழிலாளர்களுக்கு என்று தோன்றியிருக்கக்கூடிய சர்வதேச தொழிலாளர் நிறுவனம். அந்த நிறுவனம் தோன்றி இன்றோடு நூறு ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கின்றது. நூற்றாண்டு விழாவை அந்த நிறுவனம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. எனவே நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தில் 2019ல் மே தின விழாவில் இன்றைக்கு ஒரு பேரணி நடத்தி அந்த நினைவுச் சின்னத்தை போன்று ஒரு மாதிரி நினைவுச் சின்னத்தை இங்கு உருவாக்கி, அந்த நினைவு சின்னத்திற்கு நாம் எல்லோரும் ஒன்று கூடி நம்முடைய வணக்கத்தை, நம்முடைய மரியாதையை, நாம் இங்கு செலுத்தி இருக்கின்றோம்.

ஆனால், அதே நேரத்தில் மத்திய, மாநில அளவில் இருக்கக்கூடிய அரசுகளை பொறுத்தவரையில் தொழிலாளர்கள் உரிமைகள் எந்தளவிற்கு நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது, விவசாயிகளின் கோரிக்கைகள் எந்த அளவிற்கு நிராகரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது என்பதை தயவு செய்து நீங்கள் எல்லோரும் மறந்து விடக்கூடாது. ஆனால், உரிமைக்காக தங்களுடைய பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று போராடக்கூடிய, விவசாயிகளாக இருந்தாலும், தொழிலாளர்களாக இருந்தாலும், இன்றைக்கு இந்த இரண்டு ஆட்சிகளில் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். உரிமைக்காக போராடுகின்றபொழுது இந்த ஆட்சியில் தடியடி பிரயோகத்திற்கு ஆளாகின்றார்கள். சிறையில் அடைக்கப்படக்கூடிய கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். இங்கு இருக்கக்கூடிய விவசாயிகள் தங்களுடைய உரிமைகளுக்காக போராடி - போராடிப் பார்த்து வேறு வழியில்லாமல், இந்த நாட்டின் தலைநகரமான டெல்லிக்குச் சென்று போராடக்கூடிய அந்தச் சூழ்நிலை வந்த பொழுதும் கூட இந்த நாட்டின் பிரதமராக இருக்கக்கூடிய மோடி, ஒரு ஆறுதலுக்காக கூட அவர்களை அழைத்து 2 நிமிடம் உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று கூட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றேன், பரிசீலிக்கின்றேன், பார்க்கலாம் என்று கூட சொல்ல முடியாத ஒரு சாடிஸ்ட் பிரதமராக இன்றைக்கு மோடி அவர்கள்விளங்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.

மின் ஊழியர்களாக இருந்தாலும், போக்குவரத்து துறையில் பணியாற்றக் கூடிய தொழிலாளர் தோழர்களாக இருந்தாலும், அவர்களுக்கென்று இருக்கக்கூடிய ஓய்வூதிய பலன்களை கூட வழங்க முடியாத நிலையில் இன்றைக்கு இருக்கக்கூடிய அரசு இருந்து கொண்டிருக்கின்றது. ஆகவே நாட்டில் 45 கோடி தொழிலாளர்கள் உரிமைகள் எல்லாம் மோடியின் ஆட்சியில் நான்கைந்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடகு வைக்கக்கூடிய நிலைக்கு இந்த ஆட்சி போய்க் கொண்டிருக்கின்றது என்பதை நாம் மறந்துவிட முடியாது. அதற்கெல்லாம் மாற்றாக, ஒரு வழி காணக்கூடிய வகையில் வருகின்ற 23ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையும், அதேபோல் ஏற்கனவே நடந்து முடிந்திருக்கக்கூடிய 18 சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கையும், மீதம் இருக்கக்கூடிய 4 தொகுதிகள் சேர்த்து 22 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கின்றது. அப்படி நடைபெறுகின்ற நேரத்தில் நிச்சயமாக உறுதியாக இதற்கெல்லாம் ஒரு விடிவுகாலம் கிடைக்கத்தான் போகின்றது. அதில் எந்த மாற்றமும் இல்லை, அதை எதிர் நோக்கித்தான் நாம் இன்றைக்கு இந்த மே தின விழாவில் அத்துனை பேரும் இன்றைக்கு எழுச்சியோடு பங்கேற்று இருக்கின்றோம் என்பதை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, அந்த நாளை எதிர்நோக்கி காத்திருப்போம். இந்த நாட்டிற்கும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கும், குறிப்பாக தொழிலாளர் தோழர்களுக்கும், ஒரு விடிவு காலம் வருகின்ற 23ம் தேதிக்கு மேல் வரவிருக்கின்றது என்பதையும் உறுதியோடு இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, இங்கு திரண்டு இருக்கக்கூடிய தொழிலாளர்கள் அத்துனை பேருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய மே தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து, வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com