கோவையில் உலக பனைப் பொருளாதார மாநாடு  தொடக்கம்

கோவையில் இரண்டாவது  உலகப் பனைப் பொருளாதார மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பேரூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 2-ஆவது பனைப் பொருளாதார மாநாட்டு மலரை வெளியிட்ட சாந்தலிங்க மருதாசல அடிகளார். உடன், (இடமிருந்து ) வேளாண் பொருளாதாரப் பேரமைப்பு நிர்வாகிகள் 
பேரூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 2-ஆவது பனைப் பொருளாதார மாநாட்டு மலரை வெளியிட்ட சாந்தலிங்க மருதாசல அடிகளார். உடன், (இடமிருந்து ) வேளாண் பொருளாதாரப் பேரமைப்பு நிர்வாகிகள் 


கோவையில் இரண்டாவது  உலகப் பனைப் பொருளாதார மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கோவை, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை, அறிவியல் தமிழ்க் கல்லூரி, சுதேசி இயக்கம் ஆகியவை சார்பில், பேரூராதீன வளாகம் முத்தமிழ் அரங்கத்தில்  நடைபெற்ற மாநாட்டுக்கு, சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை வகித்தார். பேரமைப்புக் கொடியை சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர் பாலசுப்பிரமணிய பெரியண்ண வேணாவுடையார் ஏற்றிவைத்தார்.  மாநாட்டில், பனைப் பொருளாதாரம், பனை எழுபது ஆகிய 2 நூல்களை வெளியிட்டு சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசியதாவது:
பனை மரங்கள் சங்க காலத்தோடு தொடர்புடையவை. பனை மரத்தில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரிப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். கம்போடியா, ஆப்கானிஸ்தான், வியத்நாம் உள்ளிட்ட நாடுகளில் பனைமரங்களைப் பேணிக் காக்க மக்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனர். உலக அளவில் நடைபெறுகின்ற இந்த  இரண்டாவது மாநாட்டில் இலங்கையைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பனை மரங்களைப் பாதுகாப்பது நம் கடமை. முடிந்த வரை பனையில் இருந்து கிடைக்கும் மதிப்பு மிகுந்த பொருள்களை உபயோகிப்போம் என்றார். 
தென்னை நார் வாரியத்தின் முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், பனையின் இன்றியமையாமையை பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உணர்தல் வேண்டும். மேலும், புதிய அரசு பொறுப்பேற்றுக் கொண்டவுடன் பெருவழிச் சாலைகளில் பனை மரக்கன்றுகள் நடப்படும் என்றார். இதையடுத்து, பார்க் கல்வி நிறுவனங்களின் தலைமைச் செயல்அலுவலர் அனுஷா ரவி வாழ்த்துரை வழங்கினார். உலகப் பனை, வேளாண் பொருளாதாரப் பேரமைப்பு நிர்வாகி சாமியப்பன், பொதுச் செயலாளர் குமரி நம்பி , பொருளாளர் இராமகிருட்டிணன் ஆகியோர் பேசினர்.
முன்னதாக  மாநாட்டு வளாகத்தில், இயற்கைப் பொருள்அங்காடிகள் திறந்து வைக்கப்பட்டன. மாலையில், பெண் தொழில் முனைவோர் கருத்தரங்கம், சொக்கப்பனை  மற்றும் காத்திப்பூ (கார்த்திகைப் பூ) சுற்றுதல் முதலான நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும், பனை மரத்தில் இருந்து கிடைக்கின்ற பொருள்களின் மூலம் செய்யப்படும் 12 விதமான பனை உணவுகள்  விற்பனை செய்யப்பட்டன. பனைத் தொழில் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. இந்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை  நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com