ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை வழக்கு: மூவரிடம் 7 நாள்கள் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு

ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை சம்பவம் தொடர்பாக, சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமுதா உள்ளிட்ட மூன்று பேரை, சிபிசிஐடி போலீஸார் ஏழு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். 
நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்துவிட்டு வந்த சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன்,  ஆய்வாளர்கள் பிருந்தா, சாரதா.
நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்துவிட்டு வந்த சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன்,  ஆய்வாளர்கள் பிருந்தா, சாரதா.


ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை சம்பவம் தொடர்பாக, சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமுதா உள்ளிட்ட மூன்று பேரை, சிபிசிஐடி போலீஸார் ஏழு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். இதற்காக, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5 மணியளவில் நாமக்கல் நீதிமன்றத்தில், மூவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட ராசிபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த விருப்ப ஓய்வு பெற்ற செவிலியர் உதவியாளர் அமுதா என்ற அமுதவள்ளி (50).  
இவர் கடந்த மாதம் 25-ஆம் தேதி குழந்தைகள் விற்பனை தொடர்பாக, கட்செவி (வாட்ஸ்அப்) ஒலிநாடாவில் பேசியது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. அதனைத் தொடர்ந்து, காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு உத்தரவின்பேரில், மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அமுதா,  அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், ஈரோட்டைச் சேர்ந்த பர்வீன், ஹசீனா, அருள்சாமி, லீலா, செல்வி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.  இவர்கள் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ராசிபுரம் போலீஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை(மே 3) வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி  போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து, சிபிசிஐடி  துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன், காவல் ஆய்வாளர்கள் சாரதா, பிருந்தா உள்ளிட்டோர் விசாரணையை தொடங்கினர். இந்த வழக்கு தொடர்பாக, நாமக்கல் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ரமேஷ்குமார் சேலம் சிபிசிஐடி அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. 
இதன்பின்னர்,  கொல்லிமலைக்கு திங்கள்கிழமை பிற்பகல் சென்ற சிபிசிஐடி போலீஸார், செங்கரை, பவர்காடு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களிடத்திலும், பழங்குடியின பெண்களிடமும் நேரடி விசாரணை மேற்கொண்டனர்.
3 பேரிடம் 7 நாள்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு:
இந்த நிலையில், அமுதா உள்ளிட்ட 8 பேரையும், காவலில் எடுத்து விசாரிப்பதற்காக, நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில், சிபிசிஐடி  போலீஸார் மனு தாக்கல் செய்தனர். 
இந்த மனுவானது, நீதிபதி கருணாநிதி முன்னிலையில் புதன்கிழமை (மே 8) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் கட்டமாக 3 பேருக்குதான் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்படும் என நீதிபதி தரப்பில் கூறியதாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, அமுதா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், ஈரோட்டைச் சேர்ந்த இடைத்தரகர்  அருள்சாமி ஆகிய மூவரும் செவ்வாய்கிழமை மாலையில் 5.30 மணியளவில் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி கருணாநிதி, அவர்களை ஏழு நாள்கள் காவலில் விசாரிப்பதற்கான அனுமதியை வழங்கினார். 
இதையடுத்து, அவர்களை, சிபிசிஐடி போலீஸார் தங்களது வாகனங்களில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். இதனைத் தொடர்ந்து, அடுத்த ஓரிரு வாரங்களில் மற்ற ஐந்து பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே, ஜாமீன் கேட்டு அமுதா உள்ளிட்ட 5 பேர், நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை புதன்கிழமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று செவிலியர்களிடம் விசாரணை: நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் கொல்லிமலை செங்கரை ஆரம்ப சுகாதார நிலையச் செவிலியர்கள் இளையராணி, தனலட்சுமி, ராணி ஆகிய 3 பேரிடம் காவல்  ஆய்வாளர் பிருந்தா செவ்வாய்க்கிழமை 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார். 
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகள் எத்தனை? ஆண், பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, பெற்றோர் வறுமையில் வாழ்பவரா? ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், பிரசவித்த பெண்களிடம் வந்து பேசினாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு வாக்குமூலத்தை பதிவு செய்ததாகப் போலீஸார் தெரிவித்தனர்.
கொல்லிமலையில் 2-ஆவது நாளாக விசாரணை: இதுதவிர,  கொல்லிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிபிசிஐடி போலீஸார் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக வீடு, வீடாகச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்துக்கு விசாரணைக்கு வந்திருந்த செங்கரை ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com