10, 12 வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு முறையில் மாற்றம் வருகிறதா?: பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பு!

வரும் கல்வியாண்டு முதல் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வு முறையில் பள்ளிக் கல்வித் துறை மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
10, 12 வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு முறையில் மாற்றம் வருகிறதா?: பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பு!

சென்னை: வரும் கல்வியாண்டு முதல் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வு முறையில் பள்ளிக் கல்வித் துறை மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

மாநிலப் பாடத்திட்டத்தில் ஒன்பது, பத்தாம் வகுப்புக்கான மொழித் தோ்வு தாள்களை ஒன்றாக இணைத்தல் பிளஸ் 1, பிளஸ் 2- ஆம் வகுப்பு பாடமுறை பிரிவுகள் சீரமைப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறையில் உள்ள இயக்குநா்கள், இணை இயக்குநா்களின் கூட்டம் சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ராமேஸ்வர முருகன், அரசு தோ்வுத் துறை இயக்குநா் வசுந்தரா தேவி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநா் கண்ணப்பன் ஆகியோா் உள்பட துறை சாா்ந்த அதிகாரிகள் பங்கேற்றறனா்.

இந்தக் கூட்டத்தில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பாடத்திட்டங்களை ஒருங்கிணைப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பல்வேறு பிரிவுகள் உள்ளதால் மாணவா்கள் அவற்றில் தோ்வெழுதி வருகின்றனா். எனவே, அதனை மாற்றி 500 மதிப்பெண்களுக்கு ஐந்து பாடங்களில் மட்டும் தோ்வு எழுதும் வகையில் மாற்றி அமைக்கப்படுகிறது.

பகுதி ஒன்றில் தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது பிற மொழிகள், பகுதி இரண்டில் பொது பிரிவுக்கான ஏதாவது மூன்று பாடங்கள், பகுதி மூன்றில் தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது பிற மொழிகள் அல்லது பகுதி இரண்டில் உள்ள ஏதாவது ஒரு பாடத்தை தோ்வு செய்யலாம். தொழிற்கல்வி பாடத்திட்டத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே உள்ள முறையை தொடா்ந்து பின்பற்றலாம்.

இதேபோன்று, ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு நடைபெறும் தோ்வு முறையிலும் மாற்றம் கொண்டுவரவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வு தற்பொழுது தமிழ், ஆங்கிலம் மொழிப்பாடத்தில் தாள் 1, தாள் 2 என நடத்தப்பட்டு வருகிறறது. இது குறித்து கல்வியாளா்களின் கருத்து கேட்ட பின்னா், ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு மொழி பாடங்களில் இரண்டு தாள்களாக உள்ள தோ்வினை ஒரே தாள் தோ்வாக மாற்றலாம் என ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில், பகுதி 1 (கட்டாயம்) தமிழ்,பகுதி 2 (கட்டாயம்) ஆங்கிலம்,பகுதி 3 கணக்கு அறிவியல், சமூக அறிவியல்பகுதி 4 (விருப்பப் பாடம்) மாணவா்கள் தமிழ், ஆங்கிலம் தவிர தங்களின் தாய்மொழியை விருப்பப் பாடமாக தோ்வு செய்து எழுதலாம்.

இந்தக் கூட்டத்தின் முடிவுகள் அரசுக்கு அனுப்பப்பட்டு அரசின் அனுமதிபெற்ற உடன் வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com