கண்காணிப்பு கேமராக்களால் மக்களுக்குப் பாதுகாப்பு உணர்வு: சென்னை காவல் ஆணையர்

கண்காணிப்பு கேமராக்களால் மக்களுக்குப் பாதுகாப்பு உணர்வு கிடைத்துள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் தெரிவித்தார்.
கண்காணிப்பு கேமராக்களால் மக்களுக்குப் பாதுகாப்பு உணர்வு: சென்னை காவல் ஆணையர்

கண்காணிப்பு கேமராக்களால் மக்களுக்குப் பாதுகாப்பு உணர்வு கிடைத்துள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் தெரிவித்தார்.
 சென்னையில் குற்றங்களைக் குறைக்கும் வகையிலும், குற்றவாளிகளை விரைவில் அடையாளம் கண்டறிந்து கைது செய்யும் வகையிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்காக மூன்றாவது கண் என்ற பெயரில் பொதுமக்கள், வியாபாரிகள், தனியார் நிறுவன நிர்வாகிகள் ஆகியோரிடம் கண்காணிப்பு கேமரா பொருத்தும்படி சென்னை போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
 இதன் தொடர்ச்சியாக சென்னை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், "மூன்றாவது கண்' என்ற பெயரில் செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் நடித்த விழிப்புணர்வு குறும்படம் வெளியிட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
 இந் நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் குறும்பட சி.டி.யை வெளியிட அதை செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த், திரைப்பட இயக்குநர் சம்பத்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந் நிகழ்ச்சியில் ஆணையர் விசுவநாதன் பேசியது:
 சென்னையில் 50 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா இருக்க வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டோம். இப்போது ஏறக்குறைய அந்த இலக்கை எட்டிவிட்டோம். கண்காணிப்பு கேமராக்களினால் வீட்டை விட்டு வெளியே புறப்படும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணர்வும், சமூக விரோதிகளுக்கு பய உணர்வும் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை.
 கண்காணிப்பு கேமரா காவல்துறையின் ஒரு அங்கமாக மாறியுள்ளது. எந்தவொரு குற்றச் சம்பவங்கள் நடந்தாலும், அது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சி உள்ளதா என்றே இப்போது முதலில் கேட்கிறோம். இதனால் காவல்துறையின் அணுகுமுறை மாறியுள்ளது. காவல் பணியும் முழுமையாக மாறியுள்ளது.
 மேலும் காவலர்களின் பணிச்சுமையும், மன அழுத்தமும் குறைந்துள்ளது. கண்காணிப்பு கேமராக்களால் சென்னையில் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளன என்றார் அவர்.
 செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பேசியது:
 கண்காணிப்பு கேமராவினால் குற்றங்கள் குறைந்து வருவது மகிழ்ச்சியான செய்தி. மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் காவல் துறைக்கு கண்காணிப்பு கேமரா உதவியாக உள்ளது. எனவே காவல்துறைக்கு ஆதரவு அளிக்க பொதுமக்கள் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த முன்வர வேண்டும்.
 நிஜ குற்றவாளிகளை கண்டறிய உதவும் கண்காணிப்பு கேமரா உண்மையிலேயே செக்மேட்தான் என்றார் அவர்.
 முன்னதாக நுண்ணறிவு துணை ஆணையர் ஆர்.திருநாவுக்கரசு வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், இணை ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, நஜ்முல்ஹோடா, மகேஷ்குமாரி, விஜயகுமாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com