குழந்தைகள் விற்பனை விவகாரம்: கண்காணிப்பு வளையத்துக்குள் கருத்தரிப்பு மையங்கள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகளை பல லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவத்தையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள கருத்தரிப்பு மையங்கள் அனைத்தையும்
குழந்தைகள் விற்பனை விவகாரம்: கண்காணிப்பு வளையத்துக்குள் கருத்தரிப்பு மையங்கள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகளை பல லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவத்தையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள கருத்தரிப்பு மையங்கள் அனைத்தையும் தீவிர கண்காணிப்புக்கு உள்படுத்த சுகாதாரத் துறை முடிவெடுத்துள்ளது.
 அதுமட்டுமன்றி பிறப்புச் சான்றிதழ்களை போலியாக தயாரிக்க முடியாதபடி அதில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை உருவாக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 சட்டவிரோதமாக குழந்தைகளை தத்து கொடுப்பதையும், விற்பனை செய்வதையும் தடுக்கும் நோக்கில் இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 வறுமை நிலையைப் பயன்படுத்தி நாமக்கல், கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, மகப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது.
 இதில் தொடர்புடைய ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் உள்பட 8 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 பிறந்த குழந்தைகளை பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க சில கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 குறிப்பாக, மாநிலத்தில் உள்ள தனியார் கருத்தரிப்பு மையங்களை கண்காணிப்புக்குள்படுத்தவும், அங்கு பிறக்கும் குழந்தைகள், உரிய பெற்றோருடன்தான் உள்ளனரா என்பதை ஆய்வு செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
 குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ்களில் இனி பிரத்யேக குறியீடு (க்யூ-ஆர் கோடு) அச்சிட்டு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கணினி மூலம் உருவாக்கப்படும் அக்குறியீட்டை ஸ்கேன் செய்தால், சம்பந்தப்பட்ட பிறப்புச் சான்றிதழுக்குரிய குழந்தையின் பெற்றோர் யார் மற்றும் அதன் பிறப்பு தொடர்பான அனைத்து விவரங்களும் சுகாதாரத் துறை இணையதளத்தில் தெரிந்துவிடும் என்பதால் போலி பிறப்புச் சான்றிதழ்களை பெற முடியாது எனக் கூறப்படுகிறது.
 இதுகுறித்து, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:
 மருத்துவமனைகளில் குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்க கண்காணிப்பு கேமரா உள்பட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேவேளையில், பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் சில பெற்றோர், பணத்துக்காக தங்களது குழந்தைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வதைத் தடுக்க முடியாத சூழல் இருந்தது.
 இந்த நிலையில்தான், பிறப்பு - இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் முறை மூலமாக மட்டுமே விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்யும் நடைமுறை அண்மையில் கொண்டு வரப்பட்டது. அவற்றில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன.
 அதுமட்டுமன்றி குழந்தை பிறந்த பிறகு, அதனை மருத்துவமனையில் இருந்து பெற்றோர்கள் தங்களது வீட்டுக்குத்தான் அழைத்துச் செல்கின்றனரா? தடுப்பூசி வழங்க அந்தப் பெற்றோர்கள்தான் குழந்தைகளை எடுத்து வருகின்றனரா? என்பதை சுகாதாரத் துறை மூலம் ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com