முதல்வர் பழனிசாமி பிறந்த தினம்: ஆளுநர் புரோஹித் வாழ்த்து

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்த தினத்தை ஒட்டி (மே 12) அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்துத் தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்த தினத்தை ஒட்டி (மே 12) அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்துத் தெரிவித்தார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
 முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்த தினத்தை ஒட்டி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பி வைத்தார்.
 அந்தக் கடிதத்தில், "மகிழ்ச்சியான தங்களது பிறந்த தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டுக்கு மேலும் பல ஆண்டுகள் சேவை ஆற்றும் வகையில் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இறைவன் உங்களை வைத்திருக்க வேண்டுமென பிரார்த்தனை செய்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
 தனக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கடிதம் அனுப்பிய ஆளுநர் புரோஹித்துக்கு, முதல்வர் பழனிசாமி தனது நன்றியைத் தெரிவித்து வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.
 அதில், "எனது பிறந்த தினத்துக்காக வாழ்த்துக் கடிதத்துடன் மலர்க் கொத்தை அனுப்பி வைத்தமைக்கு நன்றிகள்' எனத் தெரிவித்துள்ளார்.
 தலைவர்கள் வாழ்த்து: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்த தினத்தை ஒட்டி, அவருக்கு பாஜக, தமாகா தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தனர்.
 முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினார். இதையொட்டி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது சுட்டுரை பக்கத்தில் முதல்வர் பழனிசாமிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
 இதேபோன்று, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனும் வாழ்த்துத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:
 தமிழிசை சௌந்தரராஜன்: சாமானிய மக்களின் தொண்டராக தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் சாமானிய மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி ஏழை, எளிய மக்களின் கனவுகளை நனவாக்கி வரும் முதல்வர் பழனிசாமிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
 தாங்கள் நீண்ட ஆயுளுடனும், உடல் நலத்துடனும் மக்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்தத் தேர்தல் வெற்றியோடு இன்னும் பல வெற்றிகளை பெற்று மக்கள் தொண்டாற்ற வாழ்த்துகிறேன்.
 ஜி.கே.வாசன்: அதிமுகவின் செயல்பாட்டிலும், மக்கள் பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருவதால் இன்றைக்கு தமிழக முதல்வர் பொறுப்பில் செயல்படக் கூடிய திறமை பெற்றவராக இருப்பது பெரிதும் பாராட்டுக்குரியது. தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்துக்கும் தங்கள் தலைமையில் நடைபெற்று வருகிற உயர்வான பணிகள் மேலும் சிறக்க, வளர, தொடர மனதார வாழ்த்துகிறேன்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com