ஒழிக்கப்படாத கொத்தடிமைத் தொழிலாளர் முறை: இரண்டு ஆண்டுகளில் 990 பேர் மீட்பு

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் செங்கல் சூளை, அரிசி ஆலைகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் கொத்தடிமைகளாக இருந்த 990 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் விவசாயப் பண்ணையில் இருந்து அண்மையில்  மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் விவசாயப் பண்ணையில் இருந்து அண்மையில்  மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்கள்.


தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் செங்கல் சூளை, அரிசி ஆலைகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் கொத்தடிமைகளாக இருந்த 990 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
கொத்தடிமைத் தொழிலாளர், வணிகத்துக்காக மனிதக் கடத்தல், பாலியல் தொழிலுக்காக குழந்தைகள், பெண்கள் கடத்தல் என பல்வேறு கோணங்களில் மனிதச் சுரண்டல் நடைபெறுகிறது. இதில், தங்களுடைய முன்னோர்கள் வாங்கிய கடனுக்காக தலைமுறை தலைமுறையாக மிகக் குறைவான கூலி, விருப்பப்பட்ட இடத்துக்கு சென்றுவரத் தடை, வேறு இடத்துக்கு வேலைக்குச் செல்வதற்கான உரிமை மறுப்பு, தாங்கள் தயாரித்த பொருள்களை சந்தை மதிப்பின்படி விற்பனை செய்யத் தடை ஆகியவை கொத்தடிமைத் தொழிலாளர் என்ற வரம்புக்குள் வருகின்றன. இந்த முறையை ஒழிக்கும் வகையில்  கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டம் கடந்த 1976-இல் இயற்றப்பட்டது. கடந்த 2016 மே மாதம் வரை ஆதிதிராவிடர் நலத் துறை வசம் இருந்த கொத்தடிமைத் தொழிலாளர் மீட்புத் துறை,  2017-இல் தொழிலாளர் நலத் துறைக்கு மாற்றப்பட்டது.இச்சட்டம் இயற்றப்பட்டு 43 ஆண்டுகளாகியும் இதுவரை கொத்தடிமைத் தொழிலாளர் முறை முழுமையாக ஒழிக்கப்படவில்லை. மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகத்தின் 2012-ஆம் ஆண்டு ஆய்வின்படி,  தமிழகத்தில் மட்டும் 66,573 பேர் கொத்தடிமைத் தொழிலில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
990 பேர் மீட்பு: இதுகுறித்து தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் கூறுகையில், தமிழகத்தில்  செங்கல் சூளை,  அரிசி ஆலைகள்,  உப்பளங்கள், விவசாயப் பண்ணைகள்,  மர ஆலைகளில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை இன்றளவும் நீடித்து வருகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 293 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 109 பேரும்,  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 63 பேரும், வேலூர் மாவட்டத்தில் 51 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 49 பேரும், நாமக்கல்லில் 13 பேரும் என மொத்தம் 715 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 79 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 39 பேரும், தஞ்சாவூரில் 36 பேரும், வேலூர், கரூரில் தலா 28 பேரும் என மொத்தம் கொத்தடிமைகளாக இருந்த 275 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றனர்.
கணக்கெடுப்பு  தேவை: இதுகுறித்து கொத்தடிமைத் தொழிலாளர் மீட்பில் ஈடுபட்டு வரும் சிறகுகள் விரிய அமைப்பின் அமைப்பாளர் தேவநேயன் கூறியதாவது: கொத்தடிமைகள் குறித்து கடந்த 1997-இல் தமிழக அரசு நடத்திய கணக்கெடுப்பில் மாநிலம் முழுவதும் 25,005 பேர் கொத்தடிமைத் தொழிலாளர்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2004-இல் தமிழக அரசு மீண்டும் கணக்கெடுப்பை நடத்தியது. ஆனால், அது குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. கடந்த 2014-இல் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நடத்திய கணக்கெடுப்பில் 11 வகையான தொழில்களில் 4 லட்சத்து 63 ஆயிரம் பேர் கொத்தடிமைகளாக உள்ளது தெரியவந்தது. எனவே, கொத்தடிமைத் தொழிலாளர் குறித்து ஒரு விரிவான கணக்கெடுப்பைத் தமிழக அரசு நடத்த வேண்டும். மேலும், கடந்த 5 ஆண்டுகளாக கூடாமல் இருக்கும்  தலைமைச் செயலர் தலைமையிலான  கொத்தடிமைத் தொழிலாளர் மீட்பு, மறுவாழ்வு குறித்த உயர்மட்டக் குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என்றார்.  
இதுகுறித்து தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் கூறுகையில், கொத்தடிமைகளாக மீட்கப்படுவோருக்கு முதல்கட்டமாக விடுதலைச் சான்றுடன் தலா ரூ. 20 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆண் தொழிலாளருக்கு தலா ரூ.1 லட்சம், பெண், குழந்தைகளுக்கு தொழிலாளருக்கு தலா ரூ.2 லட்சம், பாலியல் தொழிலுக்காக கடத்தப்படும் குழந்தைகள், திருநங்கைகளுக்கு தலா ரூ.3 லட்சம், மறுவாழ்வுக்கான வேலைவாய்ப்புகள்,  வீட்டுமனைகள் வழங்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com