மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.293 கோடி ஒதுக்கீடு

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக இதுவரை ரூ.293 கோடி நிதியை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.


மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக இதுவரை ரூ.293 கோடி நிதியை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. அதன் வாயிலாக பல்லாயிரக்கணக்கானோருக்கு சிகிச்சையளிப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் 50 கோடி பேருக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கும் ஆயுஷ்மான் பாரத்  திட்டம்  கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றாக  கருதப்படும் அத்திட்டத்தின் மூலம் ஒவ்வோரு ஏழைக் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு அளிக்கப்படுகிறது.
மொத்தம் 10 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 50 கோடி மக்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என்றும், ஏழை மக்கள் இனி மருத்துவச் செலவுக்காக கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படாது என்றும் அத்திட்டத்தை தொடங்கியபோது பிரதமர் தெரிவித்தார்.
 தமிழகத்தில் ஏற்கெனவே முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருப்பதால், அதனுடன் ஆயுஷ்மான் பாரத் திட்டமும் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து, காப்பீட்டு வரம்பை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த சில மாதங்களுக்கு  முன்பு அறிவித்தார்.
இதற்காக செலவிடப்படும் தொகையில் குறிப்பிட்ட ஒரு பகுதி மத்திய அரசு சார்பில் வழங்கப்பட வேண்டும். அதன்படி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்காக இதுவரை ரூ. 293 கோடியை பல்வேறு தவணைகளில் மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை உரிய நேரத்தில் மத்திய அரசு வழங்காமல் இருந்ததாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, தமிழக அரசு தனது காப்பீட்டு வைப்பு நிதியில் இருந்து ரூ.250 கோடியை செலவு செய்து ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தியதாக அப்போது விமர்சனங்கள் எழுந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com