அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காவல்நிலையத்தில் புகார்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை மிரட்டும் வகையில் பேசிய, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெரம்பலூர்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காவல்நிலையத்தில் புகார்


மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை மிரட்டும் வகையில் பேசிய, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தலிடம், அக்கட்சியினர் வியாழக்கிழமை புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி மாவட்ட பொறுப்பாளர் எஸ். முத்துக்குமார் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் அளித்த மனுவின் விவரம்: தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கடந்த மே 13-ஆம் தேதி ஓட்டப்பிடாரம் தொகுதியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, அரசியலமைப்புச் சட்டப்படி உறுதி ஏற்று அமைச்சராகப்  பொறுப்பு வகிப்பவர்  இவ்வாறு பேசியிருப்பது வரம்பு மீறிய செயலாகும். எனவே, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது  வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் புகார்
 கமல்ஹாசனின் நாக்கை அறுப்பேன் என்று பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திலும், சென்னை பெருநகர் காவல்துறை ஆணையரிடமும் மக்கள் நீதி மய்யத்தின் (மநீம) சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை மநீமவின் சென்னை வடக்கு மாவட்டப் பொறுப்பாளரும், பெரம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்பாளருமான பிரியதர்ஷினி வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது, கமலின் நாக்கை அறுப்பேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்தார்.
 அதே போல, பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதனிடமும் மனு அளித்து, ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com