குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் சந்தனாதி தைலம் தயாரிக்கும் பணி தொடக்கம்

குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதர் கோயிலில் சந்தனாதி தைலம் காய்ச்சும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.


குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதர் கோயிலில் சந்தனாதி தைலம் காய்ச்சும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
அகத்தியர் பொதிகை மலைக்கு வந்தபோது, குற்றாலநாதர் கோயில் வைணவக் கோயிலாக இருந்ததாகவும், கோயிலுக்குச் செல்ல முயன்ற அவரை சைவர் என்பதால் துவார பாலகர்கள் தடுத்ததாகவும், பின்னர் அகத்தியர் வைணவர் போல வேடம் பூண்டு பேரருவியில் நீராடி,  திருமாலை வணங்குபவர்போல் கோயிலுக்குள் புகுந்து குறுகுறு குற்றாலநாதா எனக் கூறி சிவனாக உருமாற்றியதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
மேலும், பெருமாளை சிவனாக மாற்றுவதற்காக அவரது தலையில் கைவைத்து அகத்தியர் அழுத்தியதால் குற்றாலநாதருக்கு தீராத தலைவலி ஏற்பட்டதாகவும், அதைப் போக்க நாள்தோறும் காலசாந்தி அபிஷேகத்தின்போது சந்தனாதி தைலத்தால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு அபிஷேகம் செய்யப் பயன்படுத்திய தைலம் சேகரிக்கப்பட்டு குற்றாலம் கோயில் நிர்வாகத்தால் விற்பனை செய்யப்படும். அந்த சந்தனாதி தைலம் தயாரிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. 
விலாமிச்சை வேர், அதிமதுரம், ஏலஅரிசி, சிறுநாகப்பூ, வாய்விளங்கம், மதரப்பூ, சதகுப்பை, அக்கரா, தாளிசபத்திரி, தேவாரம், பூலான்கிழங்கு, மரமஞ்சள், சந்தனக்கட்டை,  வங்காளப்பச்சை, சாதிக்காய்ப் பருப்பு, இலவங்கப் பட்டை, செண்பக மொட்டு, பால்சாம்பிராணி, நல்லெண்ணெய், இளநீர், கிராம்பு, பசும்பால் உள்ளிட்ட பல்வேறு நாட்டு மருந்து, மூலிகைப் பொருள்களைக் கொண்டு இத்தைலம் காய்ச்சப்படும். குறைந்த பட்சம் ஒரு மண்டலம் முதல் 6 மாதம் வரையிலும் காய்ச்சி தயாரிப்பதற்கான காலமாகும்.
2 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சந்தனாதி தைலம்  தயாரிக்கும்  பணி வியாழக்கிழமை தொடங்கியது. இதற்கான சந்தனக் கட்டைகள் தமிழகத்தில் கிடைக்காததால் தாமதம் ஏற்பட்டது. தற்போது கேரள மாநிலம், குளத்துப்புழாவில் சந்தனக் கட்டைகளை வாங்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நிகழ்ச்சியில், கோயில் உதவி ஆணையர் செல்வகுமாரி, கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com