தேர்தல் முடிவு வரும் முன் ‘எம்.பி.யான’ ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார்

குச்சனூர் கோயிலில் வைக்கப்பட்ட கல்வெட்டில், ஓபிஎஸ் மகன் எம்.பி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் முடிவு வரும் முன் ‘எம்.பி.யான’ ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார்

குச்சனூர் கோயிலில் வைக்கப்பட்ட கல்வெட்டில், ஓபிஎஸ் மகன் எம்.பி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அமைந்துள்ள சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக பலரும் நன்கொடை வழங்கியுள்ளனர். அவர்கனின் பெயர்கள் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டில் இடம் பெற்றிருந்தன. அதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் என்று பொறிக்கப்பட்டிருந்தது. 

இது அரசியல் கட்சியினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தேனி மக்களவைத் தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டார். இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 23ஆம் தேதி நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இன்னும் வாக்கு எண்ணிக்கையே நடைபெறாத நிலையில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரை எம்பி என குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது, கல்வெட்டில் எம்.பி. என பெயரிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மீது கிரிமினல் நடவடிக்கை தேவை. போலி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது போல் ஓபிஎஸ் மகன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

இதுகுறித்து தேனி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது, தேனி குச்சனூர் கோயிலில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் எம்.பி. என்று உள்ள நன்கொடையாளர் கல்வெட்டை அகற்ற வேண்டும். தனியார் கோயில் சார்பில் நன்கொடையாளர் வழங்கிய கல்வெட்டை அகற்ற துணை முதல்வர் ஓபிஎஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com