வேகமாக பரவி வரும் சின்னம்மை: இரு மாதங்களில் 2 ஆயிரம் பேர் பாதிப்பு

கோடை காலம் உச்சமடைந்துள்ள நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் மாநிலம் முழுவதும் ஏறத்தாழ 2 ஆயிரம் பேருக்கு சின்னம்மை பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
வேகமாக பரவி வரும் சின்னம்மை: இரு மாதங்களில் 2 ஆயிரம் பேர் பாதிப்பு


கோடை காலம் உச்சமடைந்துள்ள நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் மாநிலம் முழுவதும் ஏறத்தாழ 2 ஆயிரம் பேருக்கு சின்னம்மை பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் அந்த நோயின் தாக்கம் தீவிரமாக உள்ளதாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து, சின்னம்மையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்ககைளை முன்னெடுத்திருப்பதாகவும், தேவைப்படும் இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அனுப்பி உரிய சிகிச்சைகளை அளித்து வருவதாகவும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேரிசல்லா எனப்படும் வைரஸ் தொற்று மூலமாக பரவக் கூடியது சின்னம்மை. எந்தத் தருணத்தில் வேண்டுமானாலும் ஒருவருக்கு சின்னம்மை பாதிப்பு ஏற்படலாம் என்றாலும், அதன் தாக்கம் கோடை காலத்தில் அதிகமாக இருக்கும் என்பது அறிவியல் ரீதியான உண்மை.
தட்பவெட்பச் சூழல் சார்ந்த நோய்கள் என சில நோய்களை மருத்துவர்கள் அண்மைக் காலமாக வரையறைப்படுத்தி வருகின்றனர். அவற்றில் சின்னம்மையும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக ஒருவரது உடலின் வெப்பநிலை அதிகரித்தால் சின்னம்மை பாதிப்பு வரக்கூடும் என அர்த்தமல்ல. கோடை காலங்களில் அதிக சீதோஷ்ண நிலை நிலவும் போது சுற்றுப்புறங்களில் தேங்கியிருக்கும் குப்பைகள் மற்றும் அசுத்தங்களில் உள்ள வைரஸ்கள் காற்றில் கலந்து பரவும். அவற்றில் ஒரு வைரஸ்தான் வேரிசெல்லா.
அசுத்தமான சூழல்களுக்கு நடுவே வசிப்பவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் வேரிசெல்லா வைரஸ் மூலமாக சின்னம்மை பாதிப்பு எளிதில் ஏற்படும். அந்த வகை பாதிப்பு ஏற்பட்டவர்களின் எச்சில், காற்று மூலமாக பிறருக்கும் சின்னம்மை பரவ வாய்ப்புள்ளது.
அதனை சரிவர கவனிக்காவிட்டாலோ, சிகிச்சை பெறாவிட்டாலோ நிமோனியா, மூளைக் காய்ச்சல், இதய தசை அழற்சி, சிறுநீரக அழற்சி போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படக்கூடும்.  
சின்னம்மைக்கு தடுப்பூசிகள் உள்ளபோதிலும், அத்தகைய தடுப்பு மருந்துகள் மூலமாக அந்த நோய் வராமல் முழுமையாகத் தடுக்க முடியாது என்கின்றனர் மருத்துவர்கள். தடுப்பு மருந்து உட்கொண்டவர்கள் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் கோடை காலத்தில் அவர்களுக்கு  அந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே,  கடந்த மார்ச் மாதம் முதல் மே முதல் வாரம் வரையிலான தரவுகளை ஆய்வு செய்தபோது தமிழகத்தில் 1,946 பேர் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.


அதில் அதிகபட்சமாக சென்னையில் 581 பேருக்கு அந்த பாதிப்பு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சின்னம்மை தாக்கம் அதிகமாக இருக்கிறது.
இதனைக் கட்டுப்படுத்த எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து பொது சுகாதாரத் துறையின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு கூடுதல் இயக்குநர் டாக்டர் பிரேம் குமாரிடம் கேட்டபோது அவர் அளித்த பதில்:
சின்னம்மை நோய் ஒவ்வோர் ஆண்டு கோடை காலத்திலும் சற்று அதிகமாக பரவுவது வழக்கமான ஒன்றுதான். இருப்பினும், அதனைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் சின்னம்மையை குணப்படுத்தும் ஏசைக்ளோவிர் மருந்துகள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதைத் தவிர, பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒருவருக்கு சின்னம்மை பாதிப்பு ஏற்பட்டால், அவரிடம் இருந்து பிறருக்கு அந்நோய் பரவாமல் எவ்வாறு தடுப்பது? என்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com