விவசாயி என்று சொல்கிற பழனிச்சாமிதான் விவசாயத்தை அழிக்கிற வித, விதமான வேலைகளைத் செய்து கொண்டிருக்கிறார்: டிடிவி தினகரன்

விவசாயி என்று சொல்கிற பழனிச்சாமிதான் விவசாயத்தை அழிக்கிற வித, விதமான வேலைகளைத் செய்து கொண்டிருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விவசாயி என்று சொல்கிற பழனிச்சாமிதான் விவசாயத்தை அழிக்கிற வித, விதமான வேலைகளைத் செய்து கொண்டிருக்கிறார்: டிடிவி தினகரன்

விவசாயி என்று சொல்கிற பழனிச்சாமிதான் விவசாயத்தை அழிக்கிற வித, விதமான வேலைகளைத் செய்து கொண்டிருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
காவிரி டெல்டாவில் பயிர் இருக்கிற வயல்களை அழித்து எரிவாயு குழாய் பதிக்கிற வேலைகளை மத்திய அரசின் கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருவது கடுமையான கண்டனத்திற்குரியது. விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மேற்கொள்ளப்படும் மனசாட்சி அற்ற இந்தப் பாதகத்தை பழனிச்சாமி அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

சீர்காழியை அடுத்த மாதானம் முதல் செம்பனார்கோவில் அருகிலுள்ள மே மாத்தூர் வரை விளை நிலங்களில் எரிவாயு குழாய்களைப் பதிக்க வேண்டும் என கெயில் நிறுவனம் ஒற்றைக் காலில் நின்று வருகிறது. ஆனால் அப்பகுதி விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதனையும் மீறி நாற்றாங்கால்களிலும், நடவு செய்யப்பட்டிருக்கிற வயல்களிலும் எந்திரங்களைக் கொண்டு வந்து இறக்கி, எரிவாயு குழாய்களைப் பதிப்பதற்கான பணிகளை அரசு அதிகாரிகள் துணையோடு மேற்கொண்டிருக்கிறார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன.

கோவை,திருப்பூர்,ஈரோடு,நாமக்கல்,சேலம், தருமபுரி,கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் கெயில் எரிவாயு குழாய்களை விளைநிலங்களில் பதிப்பதற்கு
உச்சநீதிமன்றம் தடைவிதித்த இரண்டொரு நாட்களுக்குள்ளாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்கள். இப்படி அவசர, அவசரமாக எரிவாயு குழாய்களை டெல்டாவின் நாகப்பட்டினம் மாவட்டத்தில், பயிருள்ள நிலங்களில் பதிப்பதற்கு என்ன அவசியம் ஏற்பட்டிருக்கிறது? நமக்குச் சோறு போடுகிற விவசாயம் ஏற்கனவே நலிந்து போய் உள்ள நிலையில், அதனை மேலும் அழித்தொழிக்கிற இத்தகைய வேலைகளைச் செய்ய வேண்டியது ஏன்? மத்திய அரசாங்கத்தின் எதேச்சதிகாரத்தில் இருந்து விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டிய பழனிச்சாமி அரசு, அவர்களுக்குத் துணையாக காவல்துறையைக் கையில் வைத்துக் கொண்டு அடாவடியாக எரிவாயுக் குழாய்களைப் பதிக்க நினைப்பது தமிழ் மண்ணுக்குச் செய்யும் பச்சைத் துரோகமில்லையா? இவ்வளவையும் செய்து கொண்டே இந்த வெட்கம் கெட்டவர்கள், மூச்சுக்கு முந்நூறு முறை ‘இது அம்மாவின் ஆட்சி’ என்று வாய் கூசாமல் சொல்லிக்கொள்கிறார்கள். ‘நான் ஒரு விவசாயி’ என்று சொல்கிற பழனிச்சாமிதான் விவசாயத்தை அழிக்கிற வித, விதமான வேலைகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.

விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிற இந்தப் பணியை மத்திய, மாநில ஆட்சியாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். அங்கே குவிக்கப்பட்டிருக்கிற கனரக வாகனங்களையும், எந்திரங்களையும் அப்புறப்படுத்த வேண்டும். விவசாயிகள் தங்கள் வேளாண் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது. காவல்துறையை வைத்துக்கொண்டு இந்தக் கொடுமையை அரங்கேற்றி விடலாம் என்ற ஆணவத்தில் செயல்பட்டால், வருகிற 23 ஆம் தேதிக்குப் பிறகு இதற்கும் சேர்த்து பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதை துரோக கும்பல் மறந்து விடக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com