மீன்பிடி தடைக்காலம்: கோடையோடு சேர்த்து மீன் விலையும் வெளுத்து வாங்குகிறது

கடல்களில் மீன் பிடிக்க தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மீன்களின் வரத்து குறைந்து விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 
மீன்பிடி தடைக்காலம்: கோடையோடு சேர்த்து மீன் விலையும் வெளுத்து வாங்குகிறது

கடல்களில் மீன் பிடிக்க தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மீன்களின் வரத்து குறைந்து விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

ஞாயிற்றுக்கிழமைகளில், கடல் உணவுகளான மீன், இறால் போன்றவற்றின் விலைகள் 50 சதவீதம் அளவுக்கு அதிகரித்துக் காணப்பட்டது. 

ஒரு பக்கம் மீன் வரத்து குறைவதும், பிப்ரவரி மாதத்தின் இறுதியில் இருந்து கோடை வெயில் வாட்டுவதால் நுகர்வோர் இடையே கோழி இறைச்சியின் நுகர்வு குறைந்து மீன் இறைச்சி நுகர்வு அதிகரித்ததும் இந்த அளவுக்கு விலை உயர்வுக்குக் காரணமாகிவிட்டது.

மீன்களின் இனப் பெருக்கத்துக்காக தமிழக அரசு  ஆண்டுக்கு ஒருமுறை அறிவிக்கும் மீன்பிடி தடை உத்தரவு கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தடையானது ஜூன் 20 ஆம் தேதி வரை 60 நாள்களுக்கு நீடிக்கும். 

இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள கடல்களில் மீன் பிடிக்க மீனவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதனால் ராமேசுவரம், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து விற்பனைக்காக அனுப்பப்படும் கடல் மீன்களின் வரத்து பாதியாகக் குறைந்துள்ளது.

சென்னையில் மீன் விற்பனை செய்து வரும் பழனி கூறுகையில், பல மீன் வகைகள் விற்பனைக்கு வருவதில்லை. சின்ன சின்ன மீன்கள்தான் விற்பனைக்கு வருகின்றன. மக்களின் தேவையோ அதிகமாக உள்ளது. எனவே அதிக விலைக்கு விற்கிறோம் என்கிறார்.

61 நாள் மீன்பிடி தடைக்காலத்தின் போது சுறா, கோலா, வஞ்சரம், கனவா போன்ற மீன்கள் எல்லா சந்தைகளுக்கு விற்பனைக்கு வருவதில்லை. சில சமயங்களில் வஞ்சரம் மீனும் கிடைக்கிறது. சாதாரண நாட்களில் கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டால், இந்த காலத்தில் கிலோ ரூ.1,600க்கு விற்பனையாகிறது நொச்சிக்குப்பம் மீன் மார்க்கெட்டில்.

எந்த சமயத்திலும் சங்கரா மீனும், கவல மீன்களும் விற்பனைக்கு வந்து விடுகின்றன. முன்பெல்லாம் ரூ.100க்கு விற்கப்படும் இந்த வகை மீன்களும் தற்போது ரூ.150க்கு விறக்கப்படுகின்றன. அதுவும் தேவைக்கு ஏற்ப அதிகரிக்கும்.

கோடை வெப்பம் காரணமாக கோழி இறைச்சியை மக்கள் வாங்க விரும்பாததால், இந்த காலக்கட்டத்தில் கடல் உணவுகளின் தேவை அதிகமாக இருக்கிறது. 

மீன் மார்க்கெட்டில் நெருக்குதல்களுக்கு இடையே மீன்களை பேரம் பேசி வாங்கும் வாடிக்கையாளர்களோ, இந்த தடைக்காலத்திலும் நாங்கள் மீன் சாப்பிடுவதை நிறுத்த முடியாது. முன்பை விட குறைவான அளவில் மீன் வாங்கி சாப்பிடுவோம். அவ்வளவுதான். விலைக்கேற்ற வகையில் எந்த மீனை வாங்குவது என்று முடிவு செய்கிறோம் என்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com