விவசாயத்தைப் பாதிக்கும் திட்டங்களை அமல்படுத்த மாட்டோம்: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவசாயத்தைப் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும், தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி
விவசாயத்தைப் பாதிக்கும் திட்டங்களை அமல்படுத்த மாட்டோம்: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவசாயத்தைப் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும், தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி உறுதிபடக் கூறினார்.
சென்னையிலிருந்து பயணிகள் விமானத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சேலத்துக்கு திங்கள்கிழமை வருகை தந்தார்.  அப்போது,  அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவசாயத்தைப் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும், தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என விவசாயிகளிடம் ஏற்கெனவே உறுதி அளித்திருக்கிறோம். ஒரு சிலர் ஏதாவது ஒரு போராட்டத்தை கையில் எடுக்க வேண்டும் என்பதற்காகவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எட்டுவழிச் சாலைத் திட்டத்தைப் பொருத்தவரை, திமுக ஆட்சியின்போது 786 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டன. இந்தச் சாலைகள் அமைக்கப்பட்டபோது விவசாயிகள் பாதிக்கப்படவில்லை எனக் கூற முடியாது. ஆனால், இப்போது மட்டும் தேவையின்றி பிரச்னை செய்கின்றனர். 
2001-ஆம் ஆண்டில் இருந்ததைவிட தற்போது போக்குவரத்து 300 மடங்கு  அதிகரித்துள்ளது. சாலைப் பாதுகாப்பில் பொதுமக்களின் உயிர் முக்கியம். தற்போது 4 லட்சம் வாகனங்கள் பெருகியுள்ள நிலையில், எட்டுவழிச் சாலைத் திட்டம் செயல்படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும் என்பதால் வாகனங்களின் எண்ணிக்கை ஆறு ஆண்டுகளுக்கு பிறகு 6 லட்சமாக உயரும். அதைக் கணக்கிட்டுதான் எட்டுவழி சாலைத் திட்டம் கொண்டு வரப்படுகிறது.
சாலைகளில் பயணிக்கும் மக்களின் நன்மை கருதி 15 வருடத்துக்கு ஒருமுறை சாலைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். எட்டுவழி சாலைத் திட்டத்துக்கு 7 சதவீதத்தினர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாட்டின் நலன் கருதி பொதுமக்களின் உயிருக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களும் தாங்களாகவே முன் வந்து நிலத்தை வழங்க வேண்டும்.
குடிநீர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை: தமிழகத்தில் நிகழாண்டு பருவமழை பொய்த்து பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. இதுகுறித்து தேர்தலுக்கு முன்பு தலைமைச் செயலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்.
குடிநீர் பிரச்னையைத் தீர்க்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சென்னைக்கு அதன் அருகாமையில் உள்ள ஏரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக தண்ணீர் தேவைப்பட்டால் ரயில் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
7 பேர் விடுதலை விவகாரம்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் 7 பேர் விடுதலை விவகாரத்தில் மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப அதிமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தின் மீது ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம் என்றார் முதல்வர்.
பேட்டியின்போது,  உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அதிமுக கூட்டணியே வெற்றி பெறும்

மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் வெளியாகும் கருத்துக் கணிப்புகளை பொருத்தவரை அது வெறும் கருத்துத் திணிப்புதான். 2016-ஆம் ஆண்டு வெளியிட்ட கருத்துக் கணிப்பில்,  எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் நான் தோற்றுப்போவேன் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகிய நிலையில், 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்.  கருத்துக் கணிப்புகளை மீறி தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக  கூட்டணி வெற்றி பெறும்.
அதிமுகவைப் பொருத்தவரை எப்போதும் ஒரே நிலைப்பாடுதான்.  ஆனால், திமுகவைப் பொருத்தவரை அந்தந்த நேரத்துக்கு ஏற்ப தங்களது நிலையை மாற்றிக் கொண்டு அடிக்கடி நிறம் மாற கூடியவராக மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்றார் முதல்வர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com