வாக்கு எண்ணிக்கைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

தமிழகத்தில் வியாழக்கிழமை (மே 23) நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு தயார் நிலையில் இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். 
வாக்கு எண்ணிக்கைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்


தமிழகத்தில் வியாழக்கிழமை (மே 23) நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு தயார் நிலையில் இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். 
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-இல் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது.
இந்தத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் வியாழக்கிழமை (மே 23) எண்ணப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் அதிகாரிகள் செய்துள்ளனர். வாக்கு எண்ணும் பணிக்காக தமிழகம் முழுவதும் 45 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் குறித்து, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: 
38 மக்களவைத் தொகுதிகள், 22 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கும். 45 வாக்கு எண்ணிக்கை மையங்களில்  வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் பணியில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு மணி நேரத்துக்கு முன்பே தேர்தல் அதிகாரிகள், அலுவலர்கள், முகவர்கள் என அனைவரும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.
வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிட 88 நுண் பார்வையாளர்கள் அந்தந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சுற்றுக்குப் பின்னும் தேர்தல் பார்வையாளர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.
கேமரா மூலம் கண்காணிப்பு: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் சீலை உடைப்பது, அங்குள்ள மின்னணு இயந்திரங்களை எடுப்பது முதல், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடியும் வரை அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
வாக்கு எண்ணும் மையத்துக்குள் மூன்று அடுக்குப் பாதுகாப்பு ஏற்கெனவே போடப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது, 45 மையங்களிலும் 19 கம்பெனி மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினரும் (1,520 பேர்), 62 கம்பெனி துணை ராணுவப் படையினரும் (4,960 பேர்) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
மேலும், கூடுதல் பாதுகாப்புக்காக தமிழக காவல் துறையினர் 31 ஆயிரம் பேரும், சென்னையில் 5 ஆயிரம் பேரும் ஆக மொத்தம் 36 ஆயிரம் போலீஸார் வாக்கு எண்ணும் பணிக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எத்தனை சுற்றுகள்: ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மேஜைகள் அமைத்து வாக்கு எண்ணுவதற்கான சுற்றுகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, திருவள்ளூரில் அதிகபட்சமாக 34 சுற்றுகளும், குறைந்தபட்சம் மத்திய சென்னை தொகுதியில் 19 சுற்றுகளுடனும் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. 
எனவே வாக்கு எண்ணிக்கை முழுவதும் முடிவடையும் வரை காலநேரத்தை கணக்கிட்டுக் கூற முடியாது. நேரம் அதிகம் ஆனாலும் வாக்குகளை எண்ணுவது, முடிவுகளை தெளிவாக அறிவிப்பது என அனைத்து நிலைகளிலும் தயார் நிலையில் உள்ளோம் என்றார் சத்யபிரத சாகு.
தேர்தல் முடிவுகளை அறிய...
தேர்தல் முடிவுகளை பத்திரிகைகள், ஊடகங்கள் மட்டுமின்றி இணையதளம் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. 
இதனை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். அதன்படி, E​C​I‌r‌e‌s‌u‌l‌t‌s.​c‌o‌m.‌i‌n, ‌w‌w‌w.‌e‌l‌e​c‌t‌i‌o‌n‌s.‌t‌n.‌g‌o‌v.‌i‌n ஆகிய இணையதளங்களிலும் V‌o‌t‌e‌r‌s H‌e‌l‌p‌l‌i‌n‌e என்ற செயலி மூலமாகவும் முடிவுகளை அனைவரும் தெரிந்து கொள்ள முடியும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com