தலைக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்: விபத்துகளைக் குறைக்க புதிய முயற்சி

விபத்துகளைக் குறைக்கும் புதிய முயற்சியாக, திருச்செந்தூர் காவல் உள்கோட்டத்தில் தலைக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்புவது எனவும்,
தலைக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்: விபத்துகளைக் குறைக்க புதிய முயற்சி

விபத்துகளைக் குறைக்கும் புதிய முயற்சியாக, திருச்செந்தூர் காவல் உள்கோட்டத்தில் தலைக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்புவது எனவும், இத்திட்டத்தை ஜூன் 1 முதல் செயல்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் காவல் உள்கோட்டம்  மற்றும் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் இணைந்து, தலைக்கவசம் அணியாமல்  பெட்ரோல்  நிரப்ப வந்தால் அவர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதி முதல் பெட்ரோல்  வழங்குவதில்லை என்ற புதிய திட்டத்தை மேற்கொள்கின்றனர். இதற்காக திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், ஆறுமுகனேரி, ஆத்தூர் பகுதிகளில் உள்ள 10 பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இந்த முன்மாதிரி திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதனை வலியுறுத்தி திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் எதிரேயுள்ள பெட்ரோல்  விற்பனை நிலையத்தில் சனிக்கிழமை  நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கோட்டாட்சியர் தி.தனப்பிரியா தலைமை வகித்தார்.

காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆ.பாரத் முன்னிலை வகித்தார்.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். மேலும் விழிப்புணர்வு  வாகனப் பேரணியையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் கூறியது: தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் காவல் உள்கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலைய  உரிமையாளர்கள் மற்றும் காவல்துறை இணைந்து விபத்தை குறைக்கும் முயற்சியாக ஜூன் 1ஆம் தேதி முதல் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு  தலைக்கவசம்  இல்லாமல் வந்தால், அவர்களுக்கு பெட்ரோல் வழங்குவதில்லை என்ற புதிய திட்டத்தை தொடங்குகின்றனர்.

இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக  சுற்று வட்டார கிராமங்களில் அந்தந்தப் பகுதி காவல்துறையினர் ஈடுபடுவர். கடந்த சில நாள்களுக்கு முன்பு திருச்செந்தூர் -  திருநெல்வேலி சாலையில் தலைக்கவசம் அணியாமல் சென்ற இருவர் விபத்தில் உயிரிழந்தனர்.  தலைக்கவசம் அணிந்தால் உயிரிழப்பை தடுக்கலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் 2017-2018 ஆம் ஆண்டு 20 சதவீதம் விபத்துகள் குறைக்கப்பட்டன. 2018-2019 ஆம் ஆண்டில் இன்னும் 25 சதவீத விபத்துகளை குறைக்க முயற்சி எடுத்து வருகிறோம். இந்தப் புதிய முயற்சி பலன் அளித்தால் தூத்துக்குடி, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் உள்பட மாவட்டம் முழுவதும் இந்த  முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் திருச்செந்தூர் முத்துராமன், ஆத்தூர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், ஆறுமுகனேரி பவுன் பத்ரகாளி, திருச்செந்தூர் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஜேசுராஜ், துணைத் தலைவர் முத்துக்குமார், பொருளாளர் முகேஷ், உதவி காவல் ஆய்வாளர்கள் கனகராஜன், கார்த்திக், அன்னஜோதி, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கருப்பசாமி, பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் ஹரிகிருஷ்ணன், காயல்பட்டினம் மொகதஸீம், பொன்னையா, முக்காணி ராஜா, பரமன்குறிச்சி மணிகண்டன், குலசேகரபட்டினம்  ராஜேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com