கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்கள்: சுயநிதி கலைக் கல்லூரிகளில் தொடரும் அவலம்

தமிழகத்தில் சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை பாதியில் கைவிடும் அவல நிலை கடந்த சில ஆண்டுகளாக தொடர்கிறது. 
கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்கள்: சுயநிதி கலைக் கல்லூரிகளில் தொடரும் அவலம்

ஈரோடு: தமிழகத்தில் சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை பாதியில் கைவிடும் அவல நிலை கடந்த சில ஆண்டுகளாக தொடர்கிறது. 
தமிழகத்தில் 91 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், 139 அரசு உதவிபெறும் கல்லூரிகள், 500-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்லூரிகள் உள்ளன. இவற்றில் கலை, அறிவியல் தொடர்பான இளநிலை படிப்புகளில் ஏறத்தாழ 4 லட்சம் இடங்கள் உள்ளன.
கடந்த 5 ஆண்டுகளாக பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ஆர்வம் மாணவர்களிடம் குறைந்து, கலை, அறிவியல் படிப்புகளில் சேருவது அதிகரித்துள்ளது. இதனால் அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் மட்டுமல்லாது பெரும்பாலான சுயநிதிக் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை 90 சதவீதம் அளவை எட்டிவிடுகின்றன.  
அரசு கல்லூரிகளிலும், உதவிபெறும் கல்லூரிகளிலும் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவது என்பது பெரிய சிரமம் இல்லை. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகையில் 25 சதவீதம் அளவுக்கு தான் கல்விக் கட்டணம் இருக்கும்.
படிப்பை பாதியில் கைவிடும் 20 சதவீத மாணவர்கள்: தமிழகத்தில் உள்ள 90 சதவீத சுயநிதிக் கல்லூரிகளில் (ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை கட்டணம் வசூல் செய்யும் கல்லூரிகள்) படிக்கும் மாணவர்களில் 20 சதவீதம் பேர் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் முதலாம் ஆண்டிலேயே கல்லூரிகளில் இருந்து வெளியேறிவிடுவதாக பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சுயநிதிக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: 
தமிழகத்தில் சுமார் 500 சுயநிதிக் கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 90 சதவீதம் கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கையின்போது முழுமையாக கட்டணம் செலுத்த முடியவில்லை எனக் கூறும் பெற்றோர்களிடம் முதலில் ரூ.2,000 மட்டும் செலுத்தி கல்லூரியில் சேர்த்துவிடுங்கள் என கூறி மாணவர்களுக்கு சேர்க்கை அளிக்கின்றன. மாணவர் சேர்க்கையின் முகவர்களாக கல்லூரி பேராசிரியர்களே செயல்படுகின்றனர். ஒவ்வொரு ஆசிரியரும் குறைந்தது ஆண்டுக்கு 10 மாணவர்களை சேர்த்தால் தான் தொடர்ந்து பணியாற்ற முடியும் என நிர்வாகங்கள் பேராசிரியர்களுக்கு நெருக்கடி அளிக்கின்றன. 
இதனால் பேராசிரியர்கள் பிளஸ் 2 தேர்வு முடிந்தவுடனேயே பள்ளிகளுக்கு நேரில் சென்று கல்விக் கட்டணத்தை தவணை முறையில் செலுத்துங்கள் எனக் கூறி மாணவர்களை கல்லூரியில் சேர்த்து விடுகின்றனர். பெற்றோரும் எப்படியும் கட்டணத்தைக் கட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில் அதற்கு உடன்படுகின்றனர்.
நிர்ணயிக்கப்படாத கல்விக் கட்டணம்: கல்லூரியில் சேர்ந்த பிறகு ஜூன் மாதம் வகுப்புகள் தொடங்குகின்றன என்றால் ஆகஸ்ட் மாதம் முதல் மீதமுள்ள கட்டணத்தை கேட்டு கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றன. மாணவர்கள் கட்டணத்தை செலுத்தவில்லை என்றால், அவர்களை சேர்த்துவிட்ட பேராசிரியர்களுக்கு நெருக்கடி அளிக்கின்றன. இதனால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு பருவத்தேர்வின்போது தேர்வறை அனுமதி சீட்டை (ஹால் டிக்கெட்) வழங்க கல்லூரி நிர்வாகங்கள் மறுத்துவிடுவதால் தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவர்களும் உள்ளனர்.  
இதேபோல வகுப்பறையில் தினமும் அவமானம் ஏற்படுவதால் கல்லூரியில் சேர்ந்த ஓராண்டு காலத்துக்குள் படிப்பை பாதியில் கைவிட்டு வெளியேறும் மாணவர்களும் உள்ளனர். கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் ஆண்டுதோறும் 20 சதவீதம் மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிடுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக இந்த அவலநிலை தொடர்கிறது.  
தனியார் பள்ளிகளுக்கும், தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ள அரசு, சுயநிதிக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு 35 ஆண்டுகளாகியும் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கவில்லை. இதுதொடர்பான கேள்விகளுக்கு அரசிடமிருந்து பதில் இல்லை என்றார்.
அரசின் கடமை:  இதுகுறித்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் என்.பசுபதி கூறியதாவது:
தேர்வுக் கட்டணம், பராமரிப்புச் செலவு இவற்றுக்கே சிரமப்படும் மாணவர்களால் கல்விக் கட்டணத்தை ஏற்பாடு செய்ய முடிவதில்லை. இதனால் அவர்களால் படிப்பில் கவனம் செலுத்தவும் முடிவதில்லை. ஒரு சிலர் படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர்.
இந்த கஷ்டங்களையெல்லாம் கடந்து ஒரு மாணவர் படிப்பை முடித்தாலும், அவரது நிலைமை இதைவிட கவலைக்கிடமாக இருக்கிறது. படிப்பை முடித்துவிட்டாலும் கல்விக் கட்டணம் நிலுவை காரணமாக மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் பெற முடிவதில்லை. 
உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று கூறிக்கொண்டிருக்கும் நிலையில், கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் மாணவர்களின் முன்னேற்றமே தடைபடும் அபாயமும் இருக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
தீர்வு என்ன? சுயநிதிக் கலைக் கல்லூரிகளுக்கு அரசு உடனடியாக கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். கலை, அறிவியல் பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.15,000 ஆக வழங்க வேண்டும். 
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத அளவுக்கு மாணவர் சேர்க்கை அளிக்கப்படுவதுபோல சுயநிதிக் கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புக்கு 25 சதவீத மாணவர் சேர்க்கை அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும். 
இந்த நிலை உருவாகுமானால் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்றுக்கொள்ளும். மாணவர்களின் படிப்பும் பாதிக்காது.  மாணவர்களின் கல்விக் கனவை அழிக்காமல் ஊக்குவித்து அவர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்க அரசும், சுயநிதிக் கல்லூரி நிர்வாகங்களும் முன்வர வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com