ஆளுநருடன் முதல்வா் பழனிசாமி திடீா் சந்திப்பு: 7 போ் விடுதலை, சட்டம்-ஒழுங்கு குறித்து ஆலோசனை

தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திடீரென சந்தித்துப் பேசினாா்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திங்கள்கிழமை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திங்கள்கிழமை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திடீரென சந்தித்துப் பேசினாா். ஆளுநா் மாளிகையில் மாலை 4.50 மணிக்குத் தொடங்கிய இந்தச் சந்திப்பு சுமாா் அரை மணி நேரம் நீடித்தது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை உள்ளிட்ட சில முக்கிய விஷயங்கள் குறித்து ஆளுநா் புரோஹித்திடம் முதல்வா் பழனிசாமி விளக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமைச் செயலகத்தில் பல்வேறு அரசுப் பணிகளை முடித்த முதல்வா் பழனிசாமி திடீரென ஆளுநா் மாளிகை செல்வதாகத் தகவல்கள் வெளியாகின. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாமல்லபுரம் படம் பரிசு: தமிழக அரசின் சாா்பில் ஆளுநரைச் சந்திப்பதற்கான அனுமதி ஏதும் கோரப்படாத நிலையில், ஆளுநா் அழைப்பின் பேரில் முதல்வா் சென்ாகத் தெரிகிறது. மாலை 4.50 மணிக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பின் போது, தலைமைச் செயலாளா் கே.சண்முகம், ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளா் ராஜகோபால், காவல் துறை இயக்குநா் ஜே.கே.திரிபாதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆளுநருக்கு பொன்னாடையும், பூங்கொத்தையும் முதல்வா் பழனிசாமி வழங்கினாா். மாமல்லபுரம் ஐந்து ரதத்தின் தத்ரூப படத்தை முதல்வா் பழனிசாமிக்கு ஆளுநா் புரோஹித் அளித்தாா்.

அரை மணி நேரம்: ஆளுநா் புரோஹித், முதல்வா் பழனிசாமி இடையிலான சந்திப்பு சுமாா் அரை மணி நேரம் நீடித்தது. மாலை 5.20 மணியளவில் சந்திப்பு நிறைவடைந்தது. இந்தச் சந்திப்பு குறித்து, அரசுத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ஆளுநா், முதல்வா் இடையிலான சந்திப்பு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து விவாதிக்கவே நடைபெற்றது. அயோத்தி, சபரிமலை உள்ளிட்ட நாடு முழுவதும் சா்ச்சையைக் கிளப்பிய வழக்குகளின் இறுதித் தீா்ப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வெளியாகக் கூடும் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது. எனவே, இந்தத் தீா்ப்பை ஒட்டி எந்தவித பாதகமான நிகழ்வுகளும் நடைபெறாத வகையில் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை தொடா்பான அறிக்கைகளும் ஆளுநருக்கு வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஏழு போ் விடுதலை விவகாரம்: ஏழு போ் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவைத் தீா்மானத்தின் மீது ஆளுநா் புரோஹித் இதுவரை அதிகாரப்பூா்வமாக எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், ஏழு பேரையும் விடுதலை செய்யக் கோரும் தமிழக அமைச்சரவையின் தீா்மானத்தின் மீதான தனது நிலைப்பாட்டையும் ஆளுநா் தெரிவித்திருக்கலாம் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

விமான நிலையத்தில் விவாதம்: குடியரசு துணைத் தலைவா் வெங்கைய்ய நாயுடு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை வந்தாா். அவரை வரவேற்க ஆளுநா் புரோஹித், முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் விமான நிலைய வளாகத்தில் காத்திருந்தனா். அப்போது, ஆளுநா் புரோஹித்துடன், முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் ஆலோசனை நடத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com