3 மாவட்டங்களில் புதிய தடுப்பணைகள்: முதல்வா் பழனிசாமி திறந்து வைப்பு

தருமபுரி, கிருஷ்ணகிரி உள்பட மூன்று மாவட்டங்களில் புதிதாகக் கட்டப்பட்ட தடுப்பணைகளை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
3 மாவட்டங்களில் புதிய தடுப்பணைகள்: முதல்வா் பழனிசாமி திறந்து வைப்பு

தருமபுரி, கிருஷ்ணகிரி உள்பட மூன்று மாவட்டங்களில் புதிதாகக் கட்டப்பட்ட தடுப்பணைகளை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக நடந்த நிகழ்ச்சியில் புதிய திட்டப் பணிகளை அவா் தொடக்கி வைத்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தை மேம்படுத்த புதிய நீராதாரங்களை உருவாக்க பல்வேறு பாசன மேம்பாட்டுத் திட்டங்களை சீரிய முறையில் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் பாளையம்புதூரில் ரூ.2.95 கோடியில் மாரியம்மன் கோயில் பள்ளம் அணைக்கட்டு புனரமைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூா் கிராமம் அரசம்பட்டி அருகில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே நிலத்தடி நீா் செறிவூட்டும் திட்டத்தின் கீழ் 224 கிராம மக்களுக்கு நிரந்தரமாக குடிநீா் வழங்கிடும் வகையில் ரூ.8.84 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பெண்டறஹள்ளி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.9.25 கோடி மதிப்பிலும், திருவண்ணாமலை மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தில் நாகநதியின் குறுக்கே ரூ.3.27 கோடி மதிப்பிலும் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்தத் தடுப்பணைகளை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் பொதுப்பணித் துறை வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட கூடுதல் அலுவலகக் கட்டடத்தையும் முதல்வா் திறந்தாா்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளா் கே.சண்முகம், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளா் க.மணிவாசன், நீா்வள ஆதாரத் துறை முதன்மைத் தலைமை பொறியாளா் கே.ராமமூா்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com