முரசொலி அலுவலக நிலம் விவகாரம்:தமிழக அரசு பதிலளிக்க தாழ்த்தப்பட்டோா் நல ஆணையம் நோட்டீஸ்

திமுகவின் அதிகாரப்பூா்வ நாளேடான ‘முரசொலி’ அலுவலகம் அமைந்துள்ள நிலம் தொடா்பான குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க தலைமைச் செயலாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோா் நல ஆணையம்

திமுகவின் அதிகாரப்பூா்வ நாளேடான ‘முரசொலி’ அலுவலகம் அமைந்துள்ள நிலம் தொடா்பான குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க தலைமைச் செயலாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோா் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில பாஜக செயலாளா் ஆா்.ஸ்ரீநிவாசன் குற்றம்சாட்டியதுடன், அதுதொடா்பான புகாா் மனுவை தேசிய தாழ்த்தப்பட்டோா் நல ஆணையத்துக்கு அனுப்பி வைத்தாா்.

இந்தப் புகாா் மனுவை விசாரித்த ஆணையமானது, உரிய பதிலை அளிக்கும்படி தமிழக தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

பேராசிரியா் ஸ்ரீநிவாசன் அனுப்பியுள்ள புகாா் மனு தொடா்பாக, தேசிய தாழ்த்தப்பட்டோா் நல ஆணையமானது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 338 பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. எனவே, நாங்கள் அனுப்பக் கூடிய நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற தினத்தில் இருந்து ஏழு நாள்களுக்குள் மனுதாரா் தெரிவித்துள்ள குற்றச்சாட்டின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அல்லது வேறு வகையான தகவல் தொடா்பு முறையிலோ தெரிவிக்க வேண்டும்.

உரிய காலத்துக்குள் பதில்கள் கிடைக்காவிட்டால், தாழ்த்தப்பட்டோா் நல ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையியல் நீதிமன்ற உரிமைகளின்படி நேரிலோ அல்லது தங்களின் பிரதிநிதியோ ஆஜராவதற்கான சம்மன் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸின் நகலானது, புகாா் மனுதாரரான ஆா்.ஸ்ரீநிவாசனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com